புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்றத் தொகுதி, குடுமியாமலை கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். மாற்றுத்திறனாளியான இவர், பட்டதாரியாக இருந்து, புதுக்கோட்டையில் ஒரு கடையில் வேலை செய்து வந்தார். பின்னர், ஜாதகம் பார்ப்பதைத் தொழிலாக மாற்றிக்கொண்டார். இதில் போதிய வருமானம் இல்லாததால், ஏமாற்றி பணம் சம்பாதிக்க நினைத்திருக்கிறார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து, 2008-ம் ஆண்டு சவரிமுத்து அருள்தாஸ் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை தொடங்கியிருக்கிறார். மேலும், “எனக்கு வெளிநாட்டிலிருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் பணம் வந்துள்ளது. அறக்கட்டளைக்கு போதிய உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே அந்தப் பணத்தை எடுக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது” என்று, போட்டோஷாப்பில் உருவாக்கப்பட்ட போலி செக்கைக் காட்டி, “ஒரு லட்சம் கொடுத்து உறுப்பினராகச் சேர்ந்துகொள்ளுங்கள், உங்கள் வங்கிக் கணக்கில் ஒரு கோடி ரூபாய் வந்துவிடும்” என்று கூறி, மோசடி செய்யத் தொடங்கியிருக்கிறார்.

2

விராலிமலை தொகுதியில் தொடங்கிய இவரது ஏமாற்று மோசடி, மணப்பாறை, துவரங்குறிச்சி என விரிவடைந்து, 2009-ல் சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை குடுமியாமலையில் திறந்தவெளியில் நடத்தும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்தது. இந்த விழாவில் நடிகை சினேகா, நடிகர்கள் ராதாரவி, வடிவேலு, தாமு, சார்லி போன்றோர் கலந்துகொண்டு ரவிச்சந்திரனைப் பெருமையாகப் பேசினர். விழாவில் விராலிமலை விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி கௌரவிக்கப்பட்டார்.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படங்களை வைத்து, மேலும் உறுப்பினர் சேர்க்கையும் அதிகமானது. லட்சம் லட்சமாகப் பணமும் குவியத் தொடங்கியிருக்கிறது. புரோக்கர்களுக்கு கமிஷன் கொடுத்து ஆள் பிடிக்கப்பட்டது. ஏராளமான ஆசிரியர்கள் விஆர்எஸ் கொடுத்துவிட்டு கிடைத்த பணத்தைக் கோடிகளுக்கு ஆசைப்பட்டு ரவிச்சந்திரனின் அறக்கட்டளையில் கொடுத்து உறுப்பினராகி, பின்னாளில் கடன்காரர்களாகவும் மாறியிருக்கிறார்கள்.

Untitled-1

இப்படியே மாநிலம் முழுவதும் புரோக்கர்கள் மூலம் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள், கோடிக்கணக்கான ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டு, பல கோடிகள் வாங்கக் காத்திருக்கிறார்கள். 2013-ம் ஆண்டு கோபிச்செட்டிபாளையத்தில் பல நூறு பேர் ஏமாற்றப்பட்ட புகாரும் பதிவாகியிருக்கிறது. சில புரோக்கர்களும் சிக்கியிருக்கின்றனர்.

Advertisment

3

மேலும், பணம் வாங்கிய நபர்களுக்கு ரூ.100 கோடி, ரூ.200 கோடி என செக் கொடுப்பதும், பின்னர் ஸ்டேட் பேங்க் மேலாளர் கையெழுத்தம், சிபிஐ, ஆர்பிஐ ஊழியர்களுடன் போலியான கடிதங்கள் தயாரித்து, பலரை ஏமாற்றி பல கோடிகளைச் சம்பாதித்துள்ளனர். ஆனால், இதுவரை ஒருவருக்குக் கூட அவர்கள் கொடுத்த தொகையைக் கூட திருப்பிக் கொடுக்கவில்லை. அடுத்தவர்களின் பணத்தில் ஆடம்பரமான வாழ்க்கை, நடிகைகளுடன் நட்பு என மகிழ்ச்சியாகவே இருந்துள்ளார் ரவிச்சந்திரன்.

Untitled-2

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை மூலம் ரவிச்சந்திரனால் பாதிக்கப்பட்ட பலரும் ஆங்காங்கே புகார்கள் கொடுத்ததால், இந்த விவகாரம் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்தப் புகார்கள் குறித்து ஆங்காங்கே சோதனைகளும் விசாரணைகளும் முடிந்த நிலையில், நேற்று ரவிச்சந்திரனையும் அவரது கூட்டாளியையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்களை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறைக்கு அனுப்பிவைத்தனர்.