பத்தாம் நூற்றாண்டின் அரிய சமண சிற்பம்- வெள்ளாளக் கோட்டையூரில் கண்டுபிடிப்பு!

a4572

Rare Jain sculpture from the 10th century discovered in Vellalakottaiyur Photograph: (pudukottai)

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் வெள்ளாளக் கோட்டையூர் பெரிய கண்மாயின் கரையோரம் உள்ள  கருவேல மரக்காட்டில் முட்புதருக்குள் ஒரு சிற்பம் கிடப்பதாக பொதுக்காப்பீட்டு நிறுவன மேலாளர் நலங்கிள்ளி அளித்த தகவலையடுத்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் ஆ.மணிகண்டன் அவ்விடத்தில் கள ஆய்வு மேற்கொண்டு சமண சமயத்தின் 24 ஆவது தீர்த்தங்கரராக போற்றப்படும் மகாவீரர் சிற்பம் என அடையாளப்படுத்தியுள்ளார்.

இது குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தின் நிறுவனரும் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை ஆய்வாளருமான ஆ.மணிகண்டன் கூறியதாவது, 'புதுக்கோட்டை மாவட்டத்தில் அரிய தொல்லியல் கண்டுபிடிப்பாக 24 வது தீர்த்தங்கரரான மகாவீரரின் சிற்பம், தியான நிலையுடன் அமைந்துள்ளது. இச்சிற்பம் 90 செ.மீ உயரமும், 47 செ.மீ அகலமும், 26 செ.மீ தடிமனும் கொண்டதாக  வடிக்கப்பட்டுள்ளது.

இது பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த  கலையமைப்புடன், பத்மாசனத்தில் அமர்ந்து, தியான முத்திரை (தர்மயான முத்திரை) நிலையில் கைகளை வைத்துள்ளவாறு மகாவீரர் சிற்பம் படிக்கப்பட்டுள்ளது. இந்நிலை ஆன்மீக சாந்தம், ஞானம், துறவற வாழ்வு ஆகியவற்றைச் சுட்டிக்காட்டுகிறது.

முகத்தில் ஆழ்ந்த அமைதியும் கருணையும் வெளிப்படுகிற வகையிலும், மகாவீரரின் பின்புறம் முக்காலத்தையும் உணர்த்தும் முக்குடை கருக்கு வேலைப்பாடுடனும், குடையின் மேற்புறத்தில் குவிந்த குமிழ் போன்ற அமைப்புடனும்,பின்புறமாகத் தோன்றும் மரம், அசோக மரம் அல்லது சால மரமாகும், இம்மரம் மகாவீரர் அறிவடைந்த இடத்தை குறிக்கும் முக்கியச் சின்னமாக  விளங்குகிறது.

மகாவீரர் சிற்பத்தின் முக்குடைக்கு கீழாக பிரபாவளையம் சற்று மேல் பகுதியில் வடிக்கப்பட்டுள்ளது. மகாவீரரின் கழுத்துப் பகுதியில் தெளிவாகக் காணப்படும் மூன்று இரண்ய ரேகைகள் (கோடுகள்), காவல் – கருணை – ஞானம் ஆகிய மூன்று ஆன்மிகக் கொள்கைகளையும் குறிக்கிறது. இது புதுக்கோட்டை பகுதியில் காணப்படும் சிற்பங்களில் புதுமையான அமைப்பாக உள்ளது.

சிற்பத்தில் தலைமுடி சிறிய சுருள்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காதுகள் நீண்ட வடிவில் நீட்டிக்கப்படுவது, இராச வாழ்க்கையைத் துறந்து துறவற வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்த மகாவீரரின் துறவுப் பெருமையை சுட்டிக்காட்டுகிறது. மகாவீரரின் இருபுறங்களிலும் இயக்கியர்கள் செதுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வலப்புறத்தில் மாதங்கரும், இடப்புறத்தில் சித்தாயிகாவும், சாமரத்தை கையில் வைத்திருக்கும் வகையில், சிற்பத்தின் பக்கவாட்டில் சாமரம் செதுக்கப்பட்டுள்ளது,

ராஜ தோற்றத்துடன் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சிற்பங்களில் காணப்படும் மகுடத்தை சூடிய நிலையில்  வடிக்கப்பட்டுள்ளது. இயக்கியர்களின் கால்பகுதியில் காணப்படும் கயலானை (தெய்வீக விலங்கு வடிவச் சின்னம்) பாதுகாப்பு மற்றும் பக்தியின் அடையாளமாக மகாவீரர் அமர்ந்திருக்கும் திண்டின் பக்கவாட்டின் நீட்சியாக உள்ளன.

முகத்தில் ஆழ்ந்த தியானம் நிறைந்த சாந்த புன்னகை பளிச்சிடுகிறது. கண்கள் சற்று மூடிய நிலையில், ஆன்மிகத்தில் மூழ்கிய அமைதியான நிலையைச் சுட்டிக்காட்டுகிறது. உதடுகளில் சிறிய சிரிப்பு, மகாவீரரின் கருணை நிறைந்த தன்மையை வெளிப்படுத்துகிறது.

வரலாற்றுப் பின்னணி

இச்சிற்பம் சோழர் கால கலைப்பாணியில் இருக்கிறது. ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டு காலத்தில் புதுக்கோட்டை நிலவியல் பகுதியில் சமணம் தலைத்தோங்கி இருந்ததை புதிய சமணத் தடயங்களின் தொடர் கண்டுபிடிப்பு உறுதி செய்து வருகிறது' என்றார்.

இந்த ஆய்வின்போது தொல்லியல் கழகத்தின் இணைச் செயலர் பீர் முகமது, தொல்லியல் ஆர்வலர்கள் இராதாகிருஷ்ணன், அருள் முத்துக்குமரன், தெம்மாவூர் நந்தன், புதுகை புதல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இச்சிற்பம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் அதை பாதுகாப்பதற்கான அவசியம் குறித்து உள்ளூர் மக்களான ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் குப்புசாமி, குமார் ராஜேந்திரன் மூக்காயி ஆகியோரிடம் எடுத்துரைக்கப்பட்டதாக  ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

excavation history Pudukottai
இதையும் படியுங்கள்
Subscribe