Rameswaram fishermen protest against train strike Photograph: (rameshwaram)
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்களின் போராட்டம் காரணமாக ராமேஸ்வரம்- தாம்பரம் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக அடிக்கடி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைகள் அதிகமாகி வருகிறது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது இலங்கை அரசு. இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும், படகுகளையும் விடுவிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் குடும்பத்தார் ராமேஸ்வரத்தில் ரயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2025 ஜனவரி முதல் தற்போது 24 விசைப்படகுகள் இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது. அவை தற்போது வரை விடுவிக்கப்படவில்லை. கடந்த 11 வருடமாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் விடுவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் காரணமாக போலீசாரும் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.