பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று (29-12-25) சேலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு செயற்குழு உறுப்பினர்கள் 650 பேர், பொதுக்குழு உறுப்பினர்கள் 4,300 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், “இந்த பொதுக்குழு, செயற்குழு 27 தீர்மானங்களை நிறைவேற்றிருக்கிறோம். இந்த நேரத்தில் எதை பேசி எதை விடுவது என்று எனக்குள் ஒரு குழப்பம் இருக்கிறது. ஏனென்றால் எனக்கு இருக்கின்ற ஆதங்கத்தை கொட்டி உங்களிடம் பகிர்ந்து கொள்ள எனக்கு ஒரு மணி நேரம் தேவை. நான் இடையில் இடையில் பேசியிருக்கலாம். ஆனால், நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை கேட்டுக் கொண்டிருந்தேன். 2026 சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை எப்போது நான் அறிவிப்பேன் என்று நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறீர்கள். நிச்சயமாக வெற்றி கூட்டணியை அறிவிப்பேன்.
ஒரு குழு அல்லது ஒரு கூட்டம் அல்லது எப்படி சொல்வது? அவர்களை கும்பல் என்று தான் சொல்ல வேண்டும். அவர்களையெல்லாம் நான் வளர்த்த பிள்ளைகள் தான். நான் பொறுப்பு கொடுத்த பிள்ளைகள் தான். என்னை இப்போது அவர்கள் தூற்றுகிறார்கள். அதுவும் மிக கேவலமாக என்னையும் நமது கெளரவத் தலைவர் ஜி.கே.மணியையும் மிக மோசமாக தூற்றுகிறார்கள். எனக்கு தூக்கம் வருவதில்லை. ஆனாலும் ஒரு நாள் படுத்து தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது அந்த கனவில், என்னுடைய அம்மா வந்தார்கள். ஏன் அழுகிறாய் என்று கேட்டார்” என்று பேசிக் கொண்டிருந்த போதே கண்கலங்கி நா தழுதழுக்க பேசினார். உடனே அருகில் இருந்த அவருடைய மகள் ஸ்ரீகாந்தி, அவரை சமாதானப்படுத்தவே தனது கண்ணீரை துடைத்து மீண்டும் பேசத் தொடங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், “உன் மீது கழுத்தில் துணி போட்டு எரித்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு பையன் பதிவு போடுகிறார்ம். அந்த பதிவு போட்ட உடனேயே அவனை அழைத்து அன்புமணி அவனுக்கு பொறுப்பு கொடுக்கிறார் என்று சொன்னேன். அதற்கு என் தாய், அதற்கு நான் என்னப்பா செய்ய முடியும்? பிள்ளையை நீ அப்படி வளர்த்திருக்கிறாய்? என்று சொன்னார். ஆமாம் நான் பிள்ளையை சரியாக வளர்க்கவில்லை, என்னை மார்பிலும், பின்னாடி முதுகிலும் ஈட்டியால் குத்துற மாதிரி குத்துறான். நான் என்ன செய்வது?. என்று சொன்னேன். உலகத்தில் ஒரு தகப்பன் தன் பிள்ளைக்கு என்ன செய்வானோ அதைவிட அதிகமாக நான் அவனுக்கு செய்திருக்கிறேன். என்ன குறை வைத்தேன். ஒரு குறையும் வைக்கவில்லை.
சென்னையில் ஒரு ஆண்டுக்கு முன்பு சொத்து தகராறில் தகப்பனை 20,30 துண்டுகளாக வெட்டி ஒரு சாக்கில் கட்டி காவிரி பக்கம் என்ற ஊரில் போட்டுவிட்டு வந்ததை நீங்கள் எல்லாம் படித்திருப்பீர்கள். அதை செய்திருந்தால் கூட நான் போய் சேர்ந்திருப்பேன். ஆனால் ஒவ்வொரு நாளும் சில்லறை பசங்களை வைத்து என்னை அவமானப்படுத்துகிறான். அந்த பசங்களையும் நான் தான் வளர்த்தேன். கொஞ்ச நஞ்ச அவமானம் அல்ல. என்னையும், ஜி.கே.மணியையும் அவமானத்துகிறார்கள். 30 ஆண்டு காலம் இந்த கட்சிக்கும் மக்களுக்கும் உழைத்த ஜி.கே.மணியை அவ்வளவு தரக்குறைவாக பேசுகிறார்கள். இப்போது என்னை நேரடியாக தாக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மருத்துவர்களை பார்க்க போனால், ஏன் அன்புமணி இப்படி செய்கிறார்? இன்னும் ஐந்தாறு வருடம் பொறுக்க கூடாதா? என்று அவர்கள் கேட்கிறார்கள். இப்படி நிறைய பேர் கேட்கிறார்கள். அன்புமணியை மாற்ற முடியாது அவரை மாற்ற வழியில்லை, என்ன செய்வது? கேட்டுக்கொண்டு தான் இருக்க வேண்டும் என்று சொன்னேன்.
ஆனாலும், இப்போது நடக்கின்ற செயற்குழு பொதுக்குழு, அதற்கு முன்னாள் நடந்த குழுக்கள் அதையெல்லாம் பார்க்கும் போது 100க்கு 95 சதவீதம் பாட்டாளி மக்கள் என் பின்னால் தான் இருக்கிறார்கள். அன்புமணி பின்னால் 5 சதவீத மக்கள் கூட இல்லை. ஆனால், லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் செலவு செய்து கூட்டத்தை கூட்டி பம்மாத்து வேலையை செய்கிறார். இந்த தேர்தல் அவருக்கு சரியான பதிலை கொடுக்கும். இதற்காக ஒரு நல்ல கூட்டணியை அமைப்பேன். அந்த நல்ல கூட்டணி வெற்றியை தரும். இந்த மக்கள் என்னை எப்போதும் கைவிட்டதில்லை, இனிமேலும் கைவிடமாட்டார்கள். இது போன்று ஒரு தகப்பன் உனக்கு உலகத்தில் யாராவது கிடைத்திருப்பானா? என்னால் இதற்கு மேல் பேச முடியவில்லை. அவருடைய செயல்பாடு. உனக்கு என்ன குறை வைத்தேன். உனக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ ஒரு தகப்பனாக அதையெல்லாம் செய்தேன். ஆனால் இப்போது நீ என்னை அவ்வளவு கேவலமாக எழுத சொல்கிறாய். இதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும். சில நேரங்களில் தூக்கம் மாத்திரை போட்ட கூட தூக்கம் வர மாட்டிக்கிறது. ஏனென்றால், இவனுடைய நினைப்பு வந்துவிடுகிறது. ஆனாலும் மக்களை நினைக்கும் போதூ நான் தூங்கி விடுகிறேன்” என்று பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/29/ramacry-2025-12-29-15-03-29.jpg)