தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் கே.என். ராமஜெயம், கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். ராமஜெயம் கொலை வழக்கில் இன்னும் பல மர்மங்கள் அவிழ்க்கப்படாத நிலையில், யார் குற்றவாளிகள் என்பது கேள்விக்குறியாகவே தொடர்கிறது. கொலையாளிகள் யார்? எதற்காக ராமஜெயம் கொலை செய்யப்பட்டார்? என்ற விவரங்கள் இன்றளவும் துப்பு துலங்காமலே உள்ளது.
சம்பவத்தன்று காலை நடைபயிற்சிக்குச் சென்றிருந்த ராமஜெயத்தின் உடல், திருச்சி-கல்லணை சாலை அருகே கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த வழக்கை திருச்சி சிட்டி போலீஸ் சிறப்பு குழுக்கள் விசாரித்தன. ஆனால் வழக்கில் எந்த வித முன்னேற்றமும் இல்லாததால் சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. அதன்பின்னர், 2017-ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி சிபிஐ-யிடம் ராமஜெயம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. ஆனால் 5 ஆண்டுகளுக்கும் மேல் விசாரித்தும் கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவின்படி 2022-ஆம் ஆண்டு மாநில காவல்துறை சார்பில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) அமைக்கப்பட்டது. இக்குழுவுக்கு தூத்துக்குடி எஸ்.பி. ஜெயகுமார் தலைமை தாங்கினார், மேலும் சிபிஐ அதிகாரிகளும் சேர்க்கப்பட்டனர். அதன்பிறகு வழக்கின் விசாரணை விரிவுபடுத்தப்பட்டது. இருப்பினும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனிடையே கடந்த மார்ச் மாதம் சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவராக இருந்த எஸ்.பி. ஜெயகுமார் இடமாற்றம் செய்யப்பட்டார். அதன்பிறகு திருச்சி ரேஞ்ச் டி.ஐ.ஜி. வருண்குமார் சிறப்பு புலனாய்வு குழுவிற்கு தலைமை ஏற்று ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கத் தொடங்கினார். உறங்கிக் கொண்டிருந்த ராமஜெயம் வழக்கை மீண்டும் தூசு தட்ட ஆரம்பித்தார் சிபிசிஐடி டி.ஐ.ஜி. வருண்குமார். தஞ்சாவூர் எஸ்.பி. ராஜாராமும் முக்கிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து ஏற்கனவே கொலை வழக்கில் நெல்லை உள்ளிட்ட மத்திய சிறைகளில் இருக்கும் குற்றவாளிகளிடம் டி.ஐ.ஜி. வருண்குமார் விசாரணை நடத்தினார். பல கோணங்களில், பல இடங்களில், பலரிடம் எஸ்.ஐ.டி.-யின் விசாரணை நீண்டு கொண்டே இருக்கிறது. இந்த சூழலில் தான், டிசம்பர் 4-ஆம் தேதி இரவு டி.ஐ.ஜி. வருண்குமார் திருச்சி பாலக்கரை அருகே செயல்படும் காவேரி திரையரங்கில் தீவிர விசாரணை மேற்கொண்டார். குறிப்பாக திரையரங்க உரிமையாளர் மோகன் மற்றும் திரையரங்கில் பணியாற்றும் ஊழியர்களிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த திரையரங்கம் கடந்த 2012-ஆம் ஆண்டில் சசிகலா உறவினர் திவாகருக்கு சொந்தமாக இருந்தது. அதன்பின் சில ஆண்டுகளில் இது குத்தகைக்கு விடுக்கப்பட்டது. கொலை தொடர்பாக சதித்திட்டம் ஏதும் இந்த திரையரங்கில் தீட்டப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் 13 ஆண்டுகளாக ஒரு துப்பும் கிடைக்காத நிலையில் டி.ஐ.ஜி. வருண்குமாரின் விசாரணை, தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Follow Us