Ramadoss withdraws case against Anbumani regarding mango symbol
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காலப்போக்கில் பெரிய அளவிலான பிரச்சனையாக உருவெடுத்தது. இதனால், பாமக தொண்டர்களும், நிர்வாகிகளும் இருவர் தலைமையிலும் இரு அணிகளாகப் பிரிந்து நிற்கின்றனர். வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி, அன்புமணி தலைமையிலான பாமக அணி அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. ராமதாஸ் தலைமையிலான பாமக அணி எந்த அணியில் இடம் பெறும் என்பது இதுவரை உறுதி செய்யப்படாமல் உள்ளது.
இதனிடையே, பாமகவிற்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு குறித்தான கடிதத்தைத் தேர்தல் ஆணையம் அன்புமணியின் முகவரிக்கு அனுப்பியிருந்தது. இதனை எதிர்த்து ராமதாஸ் தரப்பினர், உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பாக, ‘பாமகவில் அன்புமணியின் தலைவர் பதவி கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. ஆனால், தற்போதும் அவர் பாமகவில் தலைவராக இருப்பதாகத் தேர்தல் ஆணையத்தில் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளார். அதனால், அவரின் முகவரிக்குச் சென்ற கடிதத்தை ரத்து செய்துவிட்டு தங்களின் முகவரிக்கு அனுப்ப வேண்டும்’ என ராமதாஸ் தரப்பினர் தெரிவித்தனர்.
இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அந்த வழக்கை ராமதாஸ் வாபஸ் பெற்றுள்ளார். மாம்பழம் சின்னம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் அணுகியுள்ளதால் இந்த வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என்று ராமதாஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது. அந்த கோரிக்கையை ஏற்று வழக்கை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Follow Us