பா.ம.க. கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நிர்வாகிகள் மாற்றம் உட்படப் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் அன்புமணி ராமதாஸ் 100 நாட்களுக்கு உரிமை மீட்டு பயணம் என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு 10 விதமான உரிமைகளை மீட்டெடுக்கவேண்டும் என்கிற பிரச்சார பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
இத்தகைய சூழலில் தான் அக்கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெறும் என ராமதாஸ் அறிவித்திருந்தார். அதே சமயம் ராமதாஸுக்குப் போட்டியாக இன்று (09-08-25) பொதுக்குழுக் கூட்டம் நடக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அன்புமணி ஆதரவாளருமான வடிவேல் ராவணன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து பா.ம.க. பொதுக்குழுவை அன்புமணி கூட்டுவதற்கு எதிராக ராமதாஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபது ஆனந்த் வெங்கடேஷ், ராமதாஸின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாமல்லபுரத்தில் பா.ம.க பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராமதாஸுக்குத் தனியாக நாற்காலி ஒன்று ஒதுக்கப்பட்டது. இருப்பினும் ராமதாஸ் இந்த கூட்டத்தில் பங்கேற்காத நிலையில் அந்த நாற்காலி காலியாவே இருந்தது. இதனையடுத்து இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அன்புமணி ராமதாஸ் தலைமையில் பா.ம.க பொதுக்குழுக் கூட்டம் மாமல்லபுரத்தில் ஒரு பக்கம் நடைபெற்றிருந்த சூழலில், நாளை (10-08-25) பூம்புகாரில் நடைபெறும் வன்னியர் சங்க மகளிர் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ராமதாஸ் தைலாபுரத்தில் இருந்து இன்று புறப்பட்டார். அவருடன் அவரது மூத்த மகள் காந்திமதியும் சென்றார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராமதாஸ், “நான் சொல்வதற்கு ஏதும் இல்லை. நாளை நடைபெறும் மாநாட்டிற்கு நீங்கள் அனைவரும் வாருங்கள். பெண்குலத்திற்கே பெருமை சேர்க்கும் மகளிர் மாநாட்டை நீங்கள் வந்து பாருங்கள். உங்களை நான் அன்போடு அழைக்கிறேன். வேறொன்றும் சொல்வதற்கு இல்லை” என்று கூறிச் சென்றார்.