Ramadoss warns Speak civilly on social media to PMK members
திண்டிவனத்தில் ராமதாஸ் தலைமையிலான பா.ம.கவின் சமூக ஊடகப் பேரவை செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், “சமூக ஊடக பேரவை மற்றவர்களை வசைபாடுவதற்கு அல்ல. சமூக ஊடகங்களில் நயமாகவும் நாகரிகமாகவும் பதிலளிக்க வேண்டும். அதற்கு பயிற்சி கொடுக்க வேண்டும். மற்றவர்கள் நம்மை 10 மடங்கு வசைபாடினாலும் நாம் நாகரிகமாக பேச வேண்டும். போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். நாம் நாகரிகமாக பதிலளிக்க வேண்டும்.
பயிற்சி கொடுத்தால் தான் நான் நினைக்கிற அல்லது நாம் நினைக்கிற அந்த சமூக ஊடகம் நமக்கு கிடைக்கும். சமூக ஊடகத்தின் மூலமாகத் தான் நாம் இந்த தேர்தலை சந்திக்க போகிறோம், சந்திக்க முடியும். ஆனால், நம்மிடம் இருக்கிற இளைஞர்களுக்கு பயிற்சி கொடுக்காமல் நாம் அதை செய்ய முடியாது, நாம் வெற்றி பெற முடியாது. அதனால், பயிற்சி ரகசியம் என்ற ஊடகத்தை மிகச் சிறப்பாக கொண்டு செல்வதற்கு முனைப்பு காட்டுங்கள். இது தான் நம்முடைய தேர்தல் வெற்றிக்கு இருக்க வேண்டும், இருக்க போகிறது.
ஆனால், இப்போது இருக்கிற இன்றைய நிலைமையில் நம்மை நாமே பெரிதாக பாராட்டிக் கொள்ள முடியாது, பாராட்டும் படியாகவும் இல்லை. அதனால், பாராட்டு படியாகப் பயிற்சி கொடுத்து நீங்கள் இந்த ஊடகத்தை கொண்டு செல்ல வேண்டும். ஒன்று சமூக ஊடகம், மற்றொன்று திண்ணைப் பிரச்சாரம் ஆகிய இரண்டும் தான் நம்முடைய வெற்றிக்கு அடித்தளமாக இருக்க வேண்டும். அதற்கு நாம் நம்மை தயார்படுத்திக் கொள்வோம்” என்று கூறினார்.
Follow Us