Ramadoss warns Don't negotiate with Anbumani regarding the alliance
பா.ம.கவில் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையிலான மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கட்சியின் சின்னம் மற்றும் பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என ராமதாஸ் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். ஆனால், தனது தலைமையிலான பா.ம.க தான் உண்மையான பா.ம.க என அன்புமணி பிரகடனப்படுத்தி கட்சியின் சின்னம் மற்றும் பெயரை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.
இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக பிற கட்சிகளிடம் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு தமிழ்நாட்டுக்கு வந்த மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அதில் சீட் ஒதுக்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்டவைகள் குறித்து பேசப்பட்டது.
குறிப்பாக அதிமுகவுக்கு 170 இடங்கள், பா.ஜ.கவுக்கு 23 இடங்கள், பா.ம.கவுக்கு 23 இடங்கள், தேமுதிகவுக்கு 6 இடங்கள், அமமுகவுக்கு 6 இடங்கள், ஓபிஎஸ்ஸுக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகின. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பா.ஜ.க தவிர எந்த கட்சிகளும் இல்லாத நிலையில், கூட்டணியில் இருந்து வெளியே இருக்கும் கட்சிகளுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக வெளியான தகவல் பேசுபொருளானது. ஆனால், எந்த கட்சிகளுக்கும் சீட் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என கட்சித் தலைவர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், கூட்டணி தொடர்பாக அன்புமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என ராமதாஸ் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பா.ம.க சமூகநீதி பேரவை பெயரில் வெளியான பொது அறிவிப்பில், பா.ம.க பெயரில் தேர்தல் கூட்டணி, அரசியல் முடிவுகளை ராமதாஸே மேற்கொள்ள வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் என்று கூறவோ கட்சியின் பெயர், கொடியைபயன்படுத்தவோ அன்புமணிக்கு உரிமை இல்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும், பா.ம.கவுடானகூட்டணி பேச்சுவார்த்தையை அன்புமணியிடம் நடத்தக்கூடாது என்றும் அதனை மீறி அன்புமணியுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு தொடரப்படும் என்று அரசியல் கட்சிகளுக்கு ராமதாஸ் தரப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Follow Us