பா.ம.க.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நிர்வாகிகள் மாற்றம் உட்படப் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார்.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் அன்புமணி ராமதாஸ் 100 நாட்களுக்கு உரிமை மீட்பு பயணம் என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு 10 விதமான உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்கிற பிரச்சார பயணத்தைத் தொடங்கியுள்ளார். அதன்படி கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக அன்புமணி ஒவ்வொரு மாவட்டமாக தனது உரிமை மீட்பு சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு பகுதியில் ராமதாஸ் திண்ணை பிரச்சாரத்தினை இன்று (10.09.2025) தொடங்கியுள்ளார்.
இதன் மூலம் ராமதாஸ் ஒவ்வொரு கிராமமாக இந்த திண்ணை பிரச்சாரத்தினை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், “தமிழகத்தில் மது முழுவதுமாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு வீட்டிலும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். என ஒவ்வொரு குழந்தைகளும் இருக்க வேண்டும். படி படி என்ற ஒரே விஷயத்தைத் தான் தொடர்ந்து நான் 50 ஆண்டு காலமாகக் கூறி வருகிறேன்” எனப் பேசினார். இந்த கூட்டத்தில் ஜி.கே. மணி மற்றும் அருள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.