பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காலப்போக்கில் பெரிய அளவிலான பிரச்சனையாக உருவெடுத்தது. இதனால், பாமக தொண்டர்களும், நிர்வாகிகளும் இருவர் தலைமையிலும் இரு அணிகளாகப் பிரிந்து நிற்கின்றனர். வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி, அன்புமணி தலைமையிலான பாமக அணி அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. ராமதாஸ் தலைமையிலான பாமக அணி எந்த அணியில் இடம் பெறும் என்பது இதுவரை உறுதி செய்யப்படாமல் உள்ளது. 

Advertisment

இதனிடையே, பாமகவிற்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு குறித்தான கடிதத்தைத் தேர்தல் ஆணையம் அன்புமணியின் முகவரிக்கு அனுப்பியிருந்தது. இதனை எதிர்த்து ராமதாஸ் தரப்பினர், உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இதில், பாமகவில் அன்புமணியின் தலைவர் பதவி கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. ஆனால், தற்போதும் அவர் பாமகவில் தலைவராக இருப்பதாகத் தேர்தல் ஆணையத்தில் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளார். அதனால், அவரின் முகவரிக்குச் சென்ற கடிதத்தை ரத்து செய்துவிட்டு தங்களின் முகவரிக்கு அனுப்ப வேண்டும்" என ராமதாஸ் தரப்பினர் தெரிவித்தனர். 

Advertisment

இந்த வழக்கில் பதிலளிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணையம், "பாமக என்பது ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சியல்ல, அது ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சி. அதனால், கட்சி சம்பந்தமான விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது.எனவே, இது குறித்துத் தேர்தல் ஆணையம் கருத்து கூற இயலாது” எனத் தெரிவித்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஏற்கனவே இதே வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி, தங்களுக்கான நிவாரணத்தை உரிமையியல் நீதி மன்றத்திலேயே பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தி இது தொடர்பான மனுவைத் தள்ளுபடி செய்தது.  

இந்நிலையில் இந்த வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, இதில், ராமதாஸ் தரப்பினர், “அன்புமணி தரப்பினர் பாமகவின் கொடி மற்றும் சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும். மேலும், ராமதாஸையே பாமகவின் தலைவராக நியமிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து, இந்த வழக்கில் அன்புமணி தரப்பு மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை வரும் மார்ச் 9 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலளிக்க, அன்புமணி தரப்பினர் கால அவகாசம் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment