பா.ம.க.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நிர்வாகிகள் மாற்றம் உட்படப் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். மற்றொருபுறம் அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாமல்லபுரத்தில் பா.ம.க. பொதுக்குழுக் கூட்டம் கடந்த 9ஆம் தேதி (09.08.2025) நடைபெற்றது.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் அக்கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெறும் என ராமதாஸ் அறிவித்திருந்தார். இந்நிலையில் ராமதாஸ் இன்று (16.08.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாக சில விஷமிகள் வதந்தி பரப்புவதாகச் செய்தி வருகிறது. இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். எனது தலைமையில் நாளை (17.08.2025 - ஞாயிற்றுக்கிழமை) பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும். இதில் எந்தவித மாற்றமும் இல்லை.
நேற்று (15.08.2025) இரவு அன்புமணி தனது இல்லத்திற்கு வந்திருந்தார். நேற்று அவரது அம்மாவும், என்னுடைய துணைவியாருமான சரஸ்வதிக்கு 77வது பிறந்த நாள். அதற்காக அன்புமணி குடும்பத்தோடு வந்தார். வாழ்த்து சொல்லிவிட்டுப் போய்விட்டார். அன்புமணி வணக்கம் சொன்னார். நானும் வணக்கம் சொன்னேன். வேற எந்த பேச்சும் இல்லை. வேற எந்த பேச்சும் கிடையாது. வணக்கம், வணக்கத்தை வரவேற்கிறது. இந்த வணக்கம், அந்த வணக்கத்தை வரவேற்கிறது. அது தவிர வேறு எதையும் நாங்கள் பேசவில்லை ” எனத் தெரிவித்துள்ளார்.