பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கடந்த வாரம் அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டிருந்தார். வழக்கமான பரிசோதனை மேற்கொள்வதற்காக அப்போலோ மருத்துவமனைக்கு வந்திருந்த ராமதாஸ், இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினை காரணமாகப் பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு ராமதாஸ் முதன்முறையாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நேரிலும், தொலைப்பேசி வாயிலாகவும் என ஒட்டுமொத்தமாக 283 பேர் நன்றாக விசாரித்தார்கள். எல்லாக் கட்சியைச் சேர்ந்தவர்களும் வந்தார்கள். ஒரு கட்சி மட்டும்தான் நலம் விசாரிக்கவில்லை. அது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சி. ஆன்ஜியோகிராம் என்ற டெஸ்ட் எடுக்கப்பட்டது. இதன் மூலம் இருதயத்துக்குச் செல்கின்ற ரத்தக் குழாய்கள் நன்றாக இருக்கிறது. பயப்படுவதற்கு எதுவும் இல்லை. எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று என்னைக் கவனித்து வருகின்ற இருதய மருத்துவ நிபுணர்கள் சொல்லிருக்கிறார்கள்.
மேலும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறினார்கள். கொடுக்கின்ற மாத்திரைகளை எடுக்க வேண்டும். மற்றபடிப் பயப்படுவதற்கு எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் அங்கேயே ஒரு அரை நாள் ஒரு அறையிலே எல்லோரும் பார்க்கும்படியாக நான் இருந்தேன். நான் ஐசியூ.வில் இல்லை . அந்த நிலைமை எனக்கு ஏற்படவில்லை. அந்த ஐ.சி.யூ வார்டுக்கு நான் போகவில்லை ” எனப் பேசினார். மேலும், “ஐயாவுக்கு (ராமதாஸ்) ஏதாவது ஆனால் தொலைத்து விடுவேன்” என அன்புமணி பேசிய பேச்சுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ராமதாஸ் பதிலளித்துப் பேசுகையில், “மாடு மேய்க்கும் பையன் கூட இப்படி ஒரு பேச்சைப் பேச மாட்டான்” எனத் தெரிவித்தார். பாமகவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணிக்கு இடையே பனிப்போர் நீடித்து வருவதும் கவனிக்கத்தக்கது.