பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸூக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது வரை தீர்வு ஏற்படாத சூழல் நிறுவி வருகிறது. இந்நிலையில் அண்மையில் அன்புமணியை கட்சியிலிருந்து ராமதாஸ் நீக்கி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதே நேரம் தங்கள் தரப்பு தான் உண்மையான பாமக என அன்புமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டு அன்புமணி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று (06.11.2025) ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “70, 80 வயசு உள்ள சொந்தங்கள், அதன் பிறகு வந்தவர்கள், இவர்களை எல்லாம் ஒன்று சேர்த்து உயிரை விட மேலாக அவர்களை நான் மதித்து கட்சியை, சங்கத்தை ஆரம்பித்து நடத்தி வந்தேன். சில தவறுகளை அரசியலிலே நான் செய்தது உண்டு. அதிலே ஒன்று தான் அன்புமணியை மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக நியமித்தது. 2வது கட்சியினுடைய தலைவர் பொறுப்பைக் கொடுத்தது இதெல்லாம் இப்படிப் பல தவறுகளைச் செய்தேன்.
இப்பொழுது அமைதியாகப் பாட்டாளி மக்கள் கட்சியை நடத்திக் கொண்டிருக்கும் போது அதிலே ஒரு பிளவு இருக்கிறது ஏற்பட்டிருக்கிறது என்று பொதுமக்கள், பிற கட்சியினர் நினைக்கிற அளவிற்கு அவருடைய பேச்சும் செயலும் அருவருக்கத்தக்க அளவிலே அமைந்திருக்கிறது. அந்த கும்பலிடம் இருக்கிற ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் எல்லாம் ஏன் எல்லோருமே நான் வளர்த்த பிள்ளைகள். என்னை ஐயா என்று அன்போடு அழைத்த பிள்ளைகள் இன்றைக்கு சில பல காரணங்களுக்காக அவர்கள் அங்கே போய்ச் சேர்ந்து அவருடைய சொற்படி என்னைத் திட்டுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
Follow Us