பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸூக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அன்புமணி தரப்பு பா.ம.க தான் உண்மையான பா.ம.க என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க கவுரத் தலைவர் ஜி.கே.மணி, அன்புமணி போலி ஆவணத்தை கொடுத்து கட்சியை திருடிவிட்டதாகவும், அதற்கு தேர்தல் ஆணையமும் துணை போயிருக்கிறது என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

Advertisment

மேலும், இந்த விவகாரம் குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாகக் கூறிய ராமதாஸ், கட்சி திருடப்பட்டுவிட்டதாக அன்புமணியை மிக காட்டமாக விமர்சித்து பேசியிருந்தார். இத்தகைய சூழலில், போலி ஆவணங்களை அளித்து பாமக கட்சியை அபகரித்ததாக அன்புமணிக்கு எதிராக, ராமதாஸ் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisment

இதனிடையே, அன்புமணிக்கு எதிராக டெல்லி காவல் நிலையத்தில் ராமதாஸ் சார்பில் பா.ம.க கவுரத் தலைவர் ஜி.கே.மணி புகார் அளித்தார். இது தொடர்பாக ஜி.கே. மணி போலீசாரிடம் அளித்துள்ள மனுவில், அன்புமணி ராமதாஸ் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பா.ம.க கட்சிக்கு ராமதாஸ் தான் தலைவர் என்றும், அன்புமணி கொடுத்த போலியானது என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்ததாக ராமதாஸ் தரப்பினர் கூறி வருகின்றனர். .

இந்த நிலையில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இன்று (09-12-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தேர்தல் ஆணையத்தை சந்திக்க நாலைந்து டீமை அனுப்பினோம். ஆனால் பார்க்க மறுத்துவிட்டார்கள். அதன் பிறகு தான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். தேர்தல் கமிஷனை எதிர்த்து வழக்கு தொடுக்கும் போது தேவையில்லாமல், பொய் பொய்யாக பேசுகிற புழுகுமூட்டை கட்சி ஒன்று ஆஜராகியது. அவர்கள் ஆஜராகக் கூடாது. ஆனால் பரிதாபப்பட்டு அதற்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்துவிட்டது. நமக்கு சாதகமாக கொடுக்கப்பட்ட தீர்ப்பு மூலம் நாங்கள் தான் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆகவே நாங்கள் தான் கட்சி, நாங்கள் தான் எல்லாம். இதையெல்லாம் சொல்வதற்கு எங்களுக்கு வெட்கமாக இருக்கிறது.

Advertisment

கட்சிக்காக உழைத்ததை எல்லாம் எத்தனை முறை சொல்லிக்காட்ட வேண்டியுள்ளது. இந்த கட்சியில் எனக்கு அதிகாரம் இல்லை எனச் சொல்வதற்கு ஒரு பிள்ளை. அதனால் தான் நாங்கள் வழக்கு தொடுத்தோம். என்னை பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்த உரிமையும் கிடையாது. தேவையென்றால் நீ ஒரு கட்சி ஆரம்பித்துக்கொள், நீ எப்படி வேண்டுமென்றாலும் நடந்துகொள். ஆனால் என் பெயரை போடக்கூடாது, என் போட்டோவை போடக்கூடாது. அதற்கு உனக்கு எந்த உரிமையும் கிடையாது” என்று உறுதிப்பட கூறினார்