Ramadoss says CBI should investigate against Corruption caseAnbumani
பா.ம.கவில் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையிலான மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கட்சியின் சின்னம் மற்றும் பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என ராமதாஸ் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். ஆனால், தனது தலைமையிலான பா.ம.க தான் உண்மையான பா.ம.க என அன்புமணி பிரகடனப்படுத்தி கட்சியின் சின்னம் மற்றும் பெயரை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க நிர்வாகக் குழு கூட்டம் இன்று (17-12-25) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ம.க பொதுச் செயலாளர் முரளி சங்கர், கெளரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சி குறித்தும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக பா.ம.கவை அன்புமணி களவாட பார்த்தாகவும், அவர் தற்போது பா.ம.க பெயரில் விருப்பமனுவை வாங்குகிறார். கட்சியும், சின்னமும் எங்களிடம் தான் உள்ளது. ஊரை ஏமாற்றி தந்தைக்கு துரோகம் செய்த அன்புமணி, உரிமை இல்லாத கட்சியின் பெயரில் விருப்ப மனுவை வாங்கியதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே போல், அன்புமணி மீது நிலுவையில் உள்ள ஊழல் வழக்கோடு கட்சியின் சின்னம், தலைவர் சம்பந்தமான விஷயத்தில் அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளையும் மோசடி வேலைகளையும் சேர்த்து சிபிஐ விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொய்யான ஆவணங்களை கொண்டு தேர்தல் ஆணையத்தை ஏமாற்றியது குறித்து ஆய்வு செய்து அன்புமணி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Follow Us