தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், விருப்ப மனு, தொகுதி பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், அதிமுக- பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க இடம்பெறுவதாக நேற்று (07-01-26) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய பா.ம.க தலைவர் அன்புமணி கூட்டணியை உறுதி செய்தார். அதன் பின் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய போது, கூட்டணி குறித்து ராமதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இருவரும் பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றனர்.
இதையடுத்து, அன்புமணியிடம் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு பா.ம.கவுக்கு தான் தான் தலைவர் என்றும், கூட்டணி பேசும் அதிகாரம் தனக்கே உள்ளது என்றும் அன்புமணியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திருந்தால் அது சட்ட விரோதம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், விழுப்புரம் தைலாப்புரத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இன்று (08-01-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஒரு நபர் ஒரு கட்சியோடு பேசிருக்கிறார். ஒப்பந்தம் போட்டாரா? கையெழுத்து போட்டாரா என எனக்கு தெரியாது. பா.ம.கவை பொறுத்தவரை நான் ஆரம்பித்த கட்சி. தனி ஒரு மனிதன் ஆரம்பித்த கட்சி. இதற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதி இல்லை. உரிமை கொண்டாடவும் முடியாது. இரவு பகல் பாராமல் ஓடி ஓடி உழைத்து இந்த கட்சியை நான் வளர்த்தேன். நான் செய்த சத்தியத்தை மீறி அன்புமணியை மத்திய அமைச்சராக்கினேன். ஆனால் அவர் எனக்கே வேட்டு வைப்பார் என்று அப்போது எனக்கு தெரியவில்லை.
ஆனால், அவர் செய்த தில்லுமுல்லுவெல்லாம் கணித்த பிறகு நிர்வாக குழு, செயற்குழு என எல்லோரும் கலந்து அவரை இந்த கட்சியில் வைத்திருக்க முடியாது என்று முடிவு செய்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அவரை நீக்கினோம். நீக்குவதற்கு முன்னாலும், என்னை பற்றி அவதூறாக பேசினார். என்னோடு இருப்பவர்கள் மனம் நோகும்படி விமர்சனங்களை செய்தார். ஒரு கோஷ்டியை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டின் அரசியலில் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டதில்லை என்று சொல்லும் அளவுக்கு நடந்துகொள்கிறார். கட்சி தலைமை பதவியை கொடுத்தேன். ஆனால், என்னிடம் இருந்து கட்சியை பறிப்பதற்கு சதி திட்டம் தீட்டி சூழ்ச்சியோடு செயல்பட்டு வருகிறார். பா.ம.க என்னால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி. அப்படி இருக்கும் போது அவருடைய தலைமை பதவியை நானே எடுத்துக்கொண்டேன். அன்புமணிக்கு தலைமை பண்பு கொஞ்சம் கூட இல்லை என்பதால், அதை செய்ய வேண்டியதானது.
எனவே கட்சி என்னிடம் தான் உள்ளது. அதற்கு சமீபத்தில் நடந்த செயற்குழு மற்றும் பொதுக்குழுவே ஆதாரம். பா.ம.க தொண்டர்கள் என்னிடம் தான் இருப்பார்கள். அவரிடம் இருக்கும் நபர்கள் பணத்துக்காக ஆசைப்பட்டு அங்கு சென்றிருக்கிறார்கள். நான் அவரை உருவாக்கி பாசத்தோடு வளர்த்த சில பேர் அங்கே ஓடிவிட்டார்கள். அன்புமணியின் துரோகத்தை கட்சியில் உள்ள எல்லோரும் புரிந்துகொண்டார்கள். அன்புமணி யாரை எங்கே நிறுத்தினாலும் அவருக்கு பா.ம.க தொண்டர்கள் உள்பட பொதுமக்களும் ஓட்டு போட மாட்டார்கள். தந்தைக்கு துரோகம் செய்த ஒரு நபருக்காக நாம் ஓட்டு போடுவது என்று மக்கள் நினைப்பார்கள். பா.ம.க சார்பில் கூட்டணி பேசுவது நீதிமன்ற அவமதிப்பு. கூட்டணி பேச அன்புமணிக்கு எந்த தகுதியும் இல்லை. என் தலைமையில் தான் கூட்டணி பேச முடியும். நான் அமைக்கின்ற கூட்டணி தான், நான் இருக்கும் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். அதனால் நேற்று நடந்தது ஒரு கூத்து, ஒரு நாடகம். இந்த நாடகத்தை தமிழக மக்கள் பார்த்துவிட்டார்கள்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/08/ramd-2026-01-08-11-31-41.jpg)