மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் இன்று (10-08-25) மாலை பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்க மகளிர் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மதுவினால் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுவதால் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை இல்லை என்ற நிலைமையை உருவாக்க வேண்டும், வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை காலம் தாழ்த்தாமல் நடைமுறைப்படுத்த வேண்டும், இடஒதுக்கீட்டின் அளவை சரியாக நிர்ணயித்திட சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும், நீட் தேர்வில் சோதனை என்ற பெயரில் மாணவிகளை வேதனைக்கு ஆளாக்கப்படுவது தடுக்க வேண்டும் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த மாநாட்டில் பேசிய ராமதாஸ், “சமீபத்தில் கங்கை கொண்ட சோழப்புரத்திற்கு வந்த பிரதமர், தந்தையை மிஞ்சிய தனையன் இருக்கக் கூடாது, அதற்கு உதாரணமாக ராஜராஜசோழன் கட்டிய பெரிய கோவிலும், ராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரமும் இருக்கிறது என்று சொன்னார். அருமையான வார்த்தை. பெண்ணுரிமை, பெண்களுக்கு பாதுகாப்பு, பெண் கல்வி என எல்லா வகையிலும் சரிபாதியாக இருக்கிறார்கள். இன்னும் சொல்ல போனால் ஆண்களை விட படிப்பிலேயே அவர்கள் தான் முதன்மையாக இருக்கிறார்கள். தொழில் செய்வதில் கூட அவர்கள் முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். 10.5% இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு ஆகியவற்றை உடனடியாக தமிழக முதல்வர் செய்ய வேண்டும் என்று அவருக்கு கோரிக்கை வைக்கிறேன்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக முதல்வர் ஏன் தயங்க வேண்டும்? அவருக்கு ஆலோசகர்களாக இருப்பவர்கள் இதை அவருக்கு சொல்ல வேண்டும். எனது அருமை நண்பர் கலைஞர், மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இடஒதுக்கீட்டை வழங்கினார். அதனால், 108 சமுதாயங்கள் பயன்பெற்றன. தந்தையை மிஞ்சிய தனையனாக நீங்கள் ஏன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக்கூடாது? ஏன் தயங்குகிறீர்கள்?. பல மாநிலங்கள் அதை செய்திருக்கிறார்கள். உங்களுக்கு ஏன் தயக்கம்?. எனவே, அதை நீங்கள் செய்து சமூக சரித்தரத்தில் இடம்பிடிக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன். 10.5% இடஒதுக்கீட்டுக்காக தமிழகமே அதிருகின்ற 7 நாள் சாலைமறியல் போன்று அல்லது அதைவிட செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களை அந்த அளவிற்கு கொண்டு செல்லாதீர்கள். ஏனென்றால் நாங்கள் அப்படிப்பட்ட ஒரு போராட்டத்தை செய்தால் தமிழ்நாடு தாங்காது. தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நாங்கள் உணர்வோம். அதனால், நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம் என்று ஒரே ஒரு தீர்மானத்தை நீங்கள் அறிவியுங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இங்கு வந்திருக்கின்ற ஆண்களும் சரி, பெண்களும் சரி இரண்டு விஷயங்களை முக்கியமாக ஒழிக்க வேண்டும். உங்கள் தெருவிலே அல்லது உங்கள் பிள்ளைகளோ அல்லது உங்கள் உற்றார் உறவினர்களோ மது மற்றும் கஞ்சா ஆகியவற்றை தொடாமல் விற்காமல் நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்து உங்கள் பகுதியிலேயே நீங்கள் கடுமையான போராட்டங்களை செய்யுங்கள். என்னை கூப்பிட்டாலும் நான் அந்த போராட்டத்திற்குவருகிறேன். சின்ன சின்ன போராட்டமாக இருந்தாலும் சரி நான் வருகிறேன். கஞ்சா மற்றும் மது ஒழிய வேண்டும். பெண்கள் நிம்மதியாக வாழ வேண்டுமென்றால் இந்த இரண்டு தீமைகளும் ஒழிய வேண்டும். தமிழக முதல்வரே, என்னிடம் ஆட்சியை கொடுங்கள் என்று நான் கேட்க மாட்டேன், அது சாத்தியமில்லை. ஆனாலும் ஒரு 10 அதிகாரிகளை என்னிடம் அனுப்புங்கள். நான் அவர்களிடம் யோசனை சொல்ல, அவர்கள் அதை கேட்டு உங்களிடம் சொல்ல வேண்டும். அதை கேட்டு நீங்கள் மேற்கொண்டு நடவடிக்கை எடுங்கள். இந்த சமூக தீமை நிச்சயமாக ஒழிக்கப்பட வேண்டும். அதற்காக நாங்கள் ஆட்சிக்கு வந்து அதை செய்வோம் என்று சொல்வதை விட சுலோபமாக நீங்கள் உங்களுடைய ஆட்சியில் செய்யலாம். அப்படி நடக்கவில்லையென்றால், நிச்சயமாக நாங்கள் ஆட்சிக்கு வந்து இந்த இரண்டு தீமைகளை ஒழிப்போம். 2026இல் தொண்டர்கள் நினைக்கும் வகையில் வெற்றிக் கூட்டணி அமையும், அமைப்பேன். அதனால் யார் என்ன சொன்னாலும் நீங்கள் கேட்கவே வேண்டாம். காது கொடுத்து கேளாதீர்கள், நான் சொல்வது தான் நடக்கும்” எனப் பேசினார்.

Advertisment