சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆசிரியர்களுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இதனால், இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் 1 வார காலமாக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 1560 பேர் கைது செய்யப்பட்டு அவர்களின் மீது அனுமதியின்றி கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில், போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.  இது குறித்து ராமதாஸ் தெரிவித்துள்ளதாவது, “பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் கலைந்து சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும், இடையில் நிறுத்தப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அவர்கள் போராடுவதும், அரசு சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதுமாக காலங்கள் தான் கடந்து கொண்டிருக்கிறது. போராடத் தொடங்கிய பலரும் ஒய்வு பெறும் வயதை நெருங்கி விட்டனர். இதனாலேயே தற்போது போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisment

கடந்த 26ஆம் தேதி முதல் தங்களது குடும்பத்தை விட்டு தலைநகர் சென்னையில் தங்கி போராடி வருகின்றனர். போராடும் அவர்களை அழைத்துப் பேசாமல் கைது செய்வதும், வழக்குப் போடுவதும் சரியானதல்ல. நாளை புத்தாண்டு என்ற போதும்கூட சொந்த ஊர் செல்லாமல் போராடுவதிலிருந்தே அவர்களது கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை அரசு உணர வேண்டும். மேலும் இந்த (ஜனவரி) மாதம் 6-ம் தேதியிலிருந்து காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்பது தி.மு.க அரசின் தேர்தல் கால வாக்குறுதி. அதனை நிறைவேற்ற வேண்டும் என்பது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நான்கரை ஆண்டு கால கோரிக்கை. தற்போது ஆட்சி முடியும் தருவாயில் உள்ளதால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டங்களைக் கையில் எடுத்துள்ளனர். அதுபோல் சமவேலைக்கு சமஊதியம் என்கிற அடிப்படையில் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பதும், தகுதி உயர்த்துவதற்காக வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதியம்  கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டதை மீண்டும் வழங்க வேண்டும் என்பதும், வட்டார அளவிலான பதிவு மூப்பு பதவி உயர்வு என்று இருந்ததை மாநில அளவிலான பதவி உயர்வு பணி மாறுதல் என மாற்றியதால் அவர்களின் குடும்ப சூழல் பாதிக்கும் என்பதால் மீண்டும் வட்டார அளவிலான பதவி உயர்வு பணி மாறுதல் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதும்  ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளாகும்.

Advertisment

மேலும் தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வியில் காலியாக உள்ள 30,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது அவர்களுக்கான கோரிக்கைகள் மட்டுமல்ல நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்குமானதாகும். எனவே ஒருவார காலமாக தலைநகரில் போராடிவரும் இடைநிலை ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு சென்று விடாமல் இருக்க பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், தமிழக முதல்வரும் உடனடியாக தலையிட்டு ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.