இன்னும் சில நாட்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த சமயத்தில், பா.ம.க கட்சியானது ராமதாஸ் அணி மற்றும் அன்புமணி அணி என இரு அணிகளாகப் பிரிந்து, இருவேறு துருவங்களாகச் செயல்பட்டுத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில், கட்சியின் அதிகாரம் எந்த அணிக்கு என்பது குறித்தும், கட்சியின் சின்னம் எந்த அணிக்கு வழங்கப்படும் என்பது குறித்தும் கேள்வி எழுந்தது. இது குறித்து முடிவெடுப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த சூழ்நிலையில், மாம்பழம் சின்னம் குறித்தான அதிகாரப்பூர்வ கடிதத்தைத் தேர்தல் ஆணையம் அன்புமணியின் முகவரிக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த ராமதாஸ், இந்த கடிதத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அன்புமணி இணைந்துள்ளார். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அன்புமணியிடம் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று தெரிவித்து வருகிறார். அதே சமயம், அதிமுக கூட்டணியில் அன்புமணி இருப்பதால், அந்த கூட்டணியில் இணைய முடியாத சூழல் ராமதாஸுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அன்புமணிக்கு எதிர்திசையில் இருக்கும் கூட்டணியில் இணைய ராமதாஸ் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான இந்திய தேர்தல் ஆணைய குழுவினர் வரும் பிப்ரவரி 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தமிழகம் வரவுள்ளனர். தமிழகம் வரும் அவர்கள், சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ள இருக்கின்றனர். இந்த ஆலோசனையில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் விரைவில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘பா.ம.க தலைவராக தன்னை பதிவு செய்யும் வரை சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை (20-02-26) சென்னை உயர் நீதிமன்றத்தில் வரவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/19/ramadosss-2026-02-19-20-15-16.jpg)