'Ramadoss is only bothered by Anbumani' - PMK condemns Photograph: (pmk)
பாமகவின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் அண்மையில் பாமகவில் இருந்து அன்புமணியை ராமதாஸ் நீக்கியிருந்தார்.
அண்மையில் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பியிருந்தார். இந்நிலையில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அன்புமணி, ''ராமதாஸ் நல்ல உடல் நலத்துடன் நன்றாக இருக்கிறார். ராமதாஸ் மருத்துவமனைக்கு செக்கப்புக்கு போயிருக்கிறார். இந்த செக்கப் திட்டமிட்ட ஒன்றுதான். ஒரு மாதத்திற்கு முன்பே செக்கப் செய்ய வேண்டும் என ஒரு வாரத்திற்கு முன்னாடியே அதை உறுதிப்படுத்தி விட்டு சென்றிருக்கிறார்.
ஆனால் ராமதாஸ் செக்கப் போனதை வைத்துக்கொண்டு சில பேர் போன் பண்ணி ''ஐயாவிற்கு உடம்பு சரியில்லை வந்து பாருங்க... ஐயாவுக்கு உடம்பு சரியில்லை வந்து பாருங்க...'' என்கிறார்கள். இதெல்லாம் அசிங்கமாக இருக்கிறது. ராமதாஸிற்கு இன்று 87 வயது. செக்கப்புக்கு போயிருக்கிறார். யார் யாரோ உள்ளே சென்று பார்த்துவிட்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். இது என்ன கண்காட்சியா? ராமதாஸின் உயிருக்கு என்ன பாதுகாப்பு. நான் இருக்கும் பொழுது காரிடோர் வரை கூட வர மாட்டார்கள். ராமதாஸின் பாதுகாப்பிற்காக உள்ளே விட மாட்டேன். ஆனால் இப்பொழுது நேரா கதவைத் திறந்து உடனே உள்ளே வந்து விடுகிறார்கள். தூங்க விட மாட்டேன் என்கிறார்கள். அவர் பாத்ரூமில் இருந்தாலும் ஐயா உங்களுக்கு போன் வந்துள்ளது எனக் கொடுக்கிறார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ஐயாவை வைத்து. ராமதாஸுக்கு ஏதாவது ஆச்சு தொலைத்துப் போட்டு விடுவேன். சும்மா இருக்க மாட்டேன். நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மனசெல்லாம் வெறி கோபத்தில் இருக்கிறேன் நான். ராமதாஸை வைத்துக்கொண்டு நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் துப்பில்லாதவர்கள்'' எனக் கடுமையாக பேசி இருந்தார்.
இந்நிலையில் அன்புமணியின் பேச்சை ராமதாஸ் தரப்பு கண்டித்துள்ளது. ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் முரளி சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து சென்ற மாதம் நீக்கப்பட்ட அன்புமணி தன்னை ஆதரிப்பவர்கள் மத்தியில் நேற்று (10.10.2025) ஒரு கூட்டத்தை நடத்தி இருக்கிறார். அது மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் பல செய்திகளை அவரது ஆதரவாளர்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதைப் பற்றி எல்லாம் நமக்கு பெரிய விமர்சனம் ஏதுமில்லை.
ஆனால் அண்மையில் ராம்தாஸ் அப்போலோ மருத்துவமனையில் சேர்ந்த போது பல்வேறு கட்சித் தலைவர்கள் அவரது நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வருகை தந்தனர். ஓரிரு பாமகவினரை தவிர மீதி அனைவரும் தமிழ்நாட்டில் உள்ள ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்களும் நேரில் வந்து சந்தித்து நலம் விசாரித்து சென்றார்கள். வர இயலாதவர்கள் தொலைபேசி மூலமும், அறிக்கைகள் வழியாகவும் அய்யா அவர்கள் நலம்பெற வேண்டும் என்ற தமது விருப்பத்தை தெரியப்படுத்தினார்கள்.
இதுகுறித்து 10.10.2025 அன்று நடந்த அக்கூட்டத்தில் அன்புமணி பேசும் போது ராமதாஸை வைத்து (எக்சிபிஷன்) கண்காட்சி நடத்துகிறார்கள் என்றும் மேலும் ராமதாஸுக்கு ஏதாவது நடந்தால் தொலைத்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்திருக்கிறார். ராமதாஸுக்கு உடல் ரீதியாகவும், மன தியாகவும் ஏதாவது தொந்தரவு ஏற்படுமென்றால் அது அன்புமணியால் மட்டுமே ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே. ராமதாஸுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு தொந்தரவுகளையும், அவமரியாதைகளையும் கொடுத்தது உலகமறிந்த ஒன்று. தற்போது அன்புமணியின் பேச்சு ராமதாஸின் மனதை பெரிதும் காயப்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் முதல்வர் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் ராமதாஸ் மருத்துவமனையில் இருக்கிறார் என்பதை அறிந்து அவர்களாகவே வந்து சந்தித்து நலம்பெற விசாரித்து சென்றிருக்கிறார்கள். யாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வரவில்லை. அதற்கான தேவையும் இல்லை. தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகள், இயக்கங்களின் தலைவர்கள் அய்யா அவர்கள் மீது கொண்ட அக்கறை, மதிப்பு ஆகியவற்றின் காரணமாகவே நலம் விசாரித்து சென்றனர்.
அன்புமணி மருத்துவமனைக்கு வந்த தலைவர்களை கண்காட்சி காண வந்தவர்கள் என்று பேசி இருப்பது உண்மையிலேயே அந்த தலைவர்களை அவமதிப்பது போன்றதாகும். அதையும் தாண்டி தொலைத்து விடுவேன் என்று மிரட்டல் விடுப்பது தரம் தாழ்ந்த சொல்லாகும். நீங்கள் வரவில்லை. பார்க்கவில்லை. என்பதெல்லாம் உங்களுடைய தனிப்பட்ட விஷயம்.
ஆனால் ராமதாஸை அவர்களைப் பார்த்து நலம் விசாரிக்க வந்த தலைவர்களை பழித்து பேசுவது, கண்காட்சி பார்க்க வந்தவர்கள் என்று பேசுவது மிகவும் கீழ்த்தரமான, நாகரீகமற்ற விமர்சனமாக இருக்கிறது. ராமதாஸ் தனது பெயரை கூட போட்டுக் கொள்ளக் கூடாது என்று பகிரங்கமாக அறிவித்து விட்ட சூழலில் மருத்துவர் அன்புமணி, மருத்துவமனையில் சந்தித்தவர்கள், நலம் வேண்டியவர்கள் மீதான விமர்சனம் எல்லை மீறியதும் , பிற தலைவர்கள் ராமதாஸ் மீது கொண்டுள்ள அக்கறை, மரியாதையை கேள்விக்கு உள்ளாக்கி அதனை சிதைக்கும் நோக்கம் கொண்டதாகும்.
இதனை பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் ராமதாஸ் சார்பில் வன்மையாக கண்டிப்பதோடு, இனி இவ்வாறான மலிவான விமர்சனத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் அன்புமணி அவர்களை கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.