பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “மருத்துவமனையில் ராமதாஸை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தேன். இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களின் உடல் நலம் குறித்தும் ராமதாஸ் கேட்டறிந்தார். வைகோ அவர்களின் மக்கள் பணியையும் அவரின் பல்வேறு அரசியல் நிகழ்வுகளையும் பெருமையோடு குறிப்பிட்டு நினைவு கூர்ந்தார். தங்களைப் பற்றியும் தலைவர் வைகோ அவர்கள் மிக உயர்வாக குறிப்பிடுவார் என்று நான் கூறினேன். ராமதாஸ் ஐயா அவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று இல்லம் திரும்ப விழைகிறேன்”
இந்நிகழ்வின் போது பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அண்ணன் ஜி.கே.மணி டாக்டர் ராமதாஸ் அவர்களின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி, சட்டமன்ற உறுப்பினர் அருள், ஜி.கே.எம். தமிழ்குமரன் ஆகியோர் உடன் இருந்தனர்.