பாமகவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கு இடையே பனிப்போர் நீடித்து வரும் நிலையில், கடந்த ஆகஸ்டு 19 அன்று பாமகவின் தலைமை அலுவலகமான தைலாபுரம் தோட்டத்தில் கூடிய ஒழுங்கு நடவடிக்கைக் குழு, அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஆகஸ்டு 31-க்குள் விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால், அன்புமணி இதுவரை விளக்கமளிக்காததால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. 22 பேர் கொண்ட பாமக நிர்வாகக் குழுவில் ராமதாஸின் மகள் காந்திமதியும் இடம்பெற்றிருந்தார். இந்தக் கூட்டத்தில், அன்புமணி 16 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்காதது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், “அன்புமணிக்கு ஆகஸ்டு 31 வரை விளக்கமளிக்க கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. தற்போது அவருக்கு மீண்டும் அவகாசம் வழங்கப்படுகிறது. செப்டம்பர் 10-க்குள் 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதிலளிக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.
இதையடுத்து, அன்புமணி மீண்டும் பதிலளிக்கவில்லை என்றால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “போகப் போகத் தெரியும்,” என்று தனது வழக்கமான பாணியில் பதிலளித்து முடித்துக் கொண்டார்.