Advertisment

“வயிறு எரிஞ்சு சொல்றேன், உன்னால முடியாது...” - மனம் நொந்து பேசிய ராமதாஸ்!

ramdoss

Ramadoss harshly criticizes Anbumani

பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸூக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில் தற்போது வரை தீர்வு ஏற்படாத சூழல் நிறுவி வருகிறது. இதனிடையே, அன்புமணி தரப்பு பா.ம.க தான் உண்மையான தரப்பு என அன்புமணி சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு சில மாதங்களுக்கு கடிதம் எழுதியிருந்தது. அதற்கு தேர்தல் ஆணையம், அன்புமணியின் சென்னை தி-நகரில் உள்ள அலுவலகத்திற்கு பதில் கடிதம் எழுதியது. இதன் மூலம், பா.ம.கவும், பா.ம.கவின் மாம்பழம் சின்னமும் அன்புமணிக்கு தான் என அன்புமணி தரப்பினர் கூறி வருகின்றனர்.

Advertisment

இதற்கிடையில், பா.ம.வுக்கு நான் தான் தலைவர் என்றும், எனவே என் தலைமையிலான பா.ம.கவுக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என ராமதாஸ் தேர்தல் ஆணையத்துக்கு சில தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார். அதில், 1989இல் இருந்து தற்போது வரை நான் தான் கட்சியை நடத்தி வருவதாகவும், என்னுடைய கட்சி வேட்பாளர்களுக்கான ஏ மற்றும் பி பாஃர்மில் நானே கையெழுத்திடுவதால் நான் தலைவராக உள்ள பா.ம.கவுக்கு தான் மாம்பழம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில், ராமதாஸின் மனுவை நிராகரித்து அன்புமணி தரப்பு பா.ம.க தான் உண்மையான பா.ம.க என்றும், அவர் தான் பா.ம.க தலைவர் என்றும் தேர்தல் ஆணையம் நேற்று (28-11-25) அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க கவுரத் தலைவர் ஜி.கே.மணி, அன்புமணி போலி ஆவணத்தை கொடுத்து கட்சியை திருடிவிட்டதாகவும், அதற்கு தேர்தல் ஆணையமும் துணை போயிருக்கிறது என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், அன்புமணியை ராமதாஸ் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். கடலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று (29-11-25) வடலூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், “எனக்கு ஒரு மகன் பிறப்பான், அவன் என்னை போலவே இருப்பான் என சினிமாவில் பாட்டு வரும். ஆனால், எனக்கு நடந்த கொடுமை. என்னுடைய உயிரைத் தான் அவன் பறிக்கவில்லை, மற்ற எல்லாவற்றையும் பறித்துவிட்டான். உரிமையை பறித்தான், நான் சிந்திய வியர்வையை பறித்தான். இனிமேல் விடக்கூடாது. அந்த உரிமையை இனி யாரும் பறிக்க முடியாது. உச்ச நீதிமன்றத்துக்கு போனாலும் பறிக்க முடியாது. அந்த வகையில் டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடருத்திருக்கிறோம்.

சூட்சியினால் தன்னை தலைவன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறான். இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழ் மக்கள், ஒட்டுமொத்த வன்னிய மக்கள், ஒட்டுமொத்த பிற சமூகத்தினர்,ஒட்டுமொத்த பிற கட்சியினர் எல்லாம் இவனுடைய சூழ்ச்சியை புரிந்து கொண்டார்கள். நீ எந்த உச்ச நீதிமன்றம் இல்லை எந்த கோர்ட்டுக்கும் போனாலும் இந்த ராமதாஸ் தான் ஜெயிப்பான், வெல்லுவான். ராமதாஸை தோற்கடிக்க யாராலும் முடியாது. உரிமையை பறிக்க எண்ணாதே. என்னிடம் என்ன இருக்கிறது? எல்லாவற்றையும் பறித்துக் கொண்டாயே.. என்னிடம் ஒன்றுமில்லை. ஆனால், வேர்வை சிந்தி 46 ஆண்டு காலம் 96,000 கிராமங்களுக்குச் சென்று எம் மக்களை சந்தித்து நம்முடைய சமூகத்தின் நிலைமையை சொல்லி வளர்த்த இந்த கட்சியை நீ முழுவதும் அபகரிக்க எண்ணுகிறாய். இந்த உரிமையை என்னால் விட்டு கொடுக்க முடியாது. அதனால் தான் மீண்டும் இந்த கட்சியின் தலைவர் ஆனேன்.

மே 28, 2025 அன்று பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட உன் பதவி காலம் முடிந்துவிட்டது. இப்போது ஏமாற்றி பொய் சொல்லி தேர்தல் கமிஷனையே விலைக்கு வாங்கிவிட்டாய். என் கூட இருந்தவர்களை எல்லாம் விலைக்கு வாங்கிட்டே, இப்போது தேர்தல் கமிஷனையே விலைக்கு வாங்கிட்டே. தேர்தல் கமிஷனுக்கு உண்மையை சொன்னாலும் புரிய மாட்டிக்கிறது. ஏனென்றால் பணம் பத்தும் செய்யும் என்று சொல்வார்கள், பணம் தேர்தல் கமிஷன் வரைக்கும் போய்விட்டது. அதனால், இதையெல்லாம் தமிழ் மக்கள் நம்ப மாட்டார்கள். கட்சி ஆரம்பித்த போது தனியாக 4 எம்.எல்.ஏக்கள் இருந்தார்கள். ஆனால், இப்போது கூட்டணியில் வெறும் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தான் இருக்கிறார்கள். அதற்கு காரணம், இவருடைய செயல் தான், தேர்வு தலையீடு தான். இனி அது நடக்காது. அதனால் என்னுடைய அந்த உரிமையை நான் விட்டுக் கொடுக்க முடியாது. என்னுடைய உழைப்பை யாரும் திருட முடியாது.

என்னை வெல்ல நினைக்கிறாய். என்னை வெல்ல உன்னால் முடியுமா? நிச்சயமாக முடியாது. நான் செய்த தவறுகள், உன்னை படிக்க வைத்தது, டாக்டர் ஆக்கியது, டெல்லி மந்திரி ஆக்கியது, அடுத்து கட்சிக்கு தலைவர் ஆக்கியது. இப்படி எத்தனையோ தவறுகளை நான் செய்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது நீ, என்னோடு மோத நினைக்கிறாய். அது உன்னால் முடியாது. சாதாரணமாக சினிமாவில் அல்லது நடைமுறையில் போடா உன் பாச்சா பழிக்காது என்று சொல்வார்கள். அந்த மாதிரி, டெல்லி தேர்தல் கமிஷனிடம் வேண்டுமானாலும் நீ வெற்றி பெறலாம். ஆனால், நீதி வெற்றி பெறும், நியாயம் வெற்றி பெறும். என் பின்னால் நியாயம் இருக்கிறது. நான் வயிறு எரிஞ்சு சொல்றேன், உன்னுடைய அரசியல் பயணம் முடிவடைந்துவிட்டது” என்று காட்டமாகப் பேசினார். 

anbumani ramadoss Cuddalore Ramadoss
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe