Ramadoss gave a new idea to the Tamil Nadu government Photograph: (pmk)
'முதல்வர் மருந்தகங்களை நியாயவிலைக் கடைகளில் தனிப்பிரிவாக அமைத்து விரிவுபடுத்த வேண்டும்' என யோசனை கொடுத்திருக்கிறார் பாமகவின் ராமதாஸ்.
இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1,000 முதல்வர் மருந்தகம் தொடங்கப்பட்டது. ஏழை மக்களுக்கு மலிவு விலையில் 762 தரமான மருந்துகள் இங்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. இம்மருந்தகம் அமைக்க பி.பார்ம் அல்லது டி.பார்ம் படித்தவர்களோ, அவர்களது ஒப்புதலைப் பெற்ற தொழில்முனைவோரோ, கூட்டுறவு அமைப்புகளோ இதற்கென விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அப்படி விண்ணப்பிப்போர் 110 சதுர அடி இடத்தை அளிக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுவோருக்கு 3 லட்சம் ரூபாய் வரை மானிய உதவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி வந்த விண்ணப்பங்களில் தொழில்முனைவோர் 500 பேர், கூட்டுறவு சங்கங்கள் 500 என 1,000 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டன. இவர்களில் தொழில் முனைவோருக்கு 3 லட்சம் ரூபாயும், கூட்டுறவு அமைப்புகளுக்கு 2 லட்சம் ரூபாயும், மருந்தாகவும் உட்கட்டமைப்பு உதவிகளாகவும் மானியமாக அளிக்கப்பட்டது. மருந்தாளுநர்களுக்கு முறைப்படி பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களுக்கு ரூ.12 ஆயிரம் முதல் 17 ஆயிரம் வரை கூட்டுறவுத்துறை மூலம் ஊதியம் வழங்கப்பட்டது.
முதல்வர் மருந்தகங்களில் பொதுப் பெயர் மருந்துகள் எனப்படும் ஜெனரிக் மருந்துகளும், பெரிய பிராண்டுகள் தயாரித்து விற்கக்கூடிய ஜெனரிக் மருந்துகளும் கிடைக்கும். இந்த மருந்துக் கடைகளில் விற்கப்படும் ஜெனரிக் மருந்துகளை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகமும், பிராண்ட் மருந்துகள், சர்ஜிகல் பொருட்கள் உள்ளிட்டவற்றை இம்காப்ஸ் மூலமும் கொள்முதல் செய்துகொள்ளலாம். இந்த மருந்துக் கடைகளில் ஒரு மருந்து தீர்ந்துபோய்விட்டால், அவற்றை அந்தந்த மருந்துக் கடைகள் ஆன்லைன் மூலம் கோரிப் பெற முடியும். இந்த மருந்தகங்களை அமைப்பதற்குக் கூட்டுறவு அமைப்புகள் மூலம் கடன் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இந்த மருந்தகங்களில் ஜெனரிக் வகை மருந்துகள், அதாவது காப்புரிமை இல்லாத மருந்துகள் 25 சதவீத தள்ளுபடியில் விற்கப்படுகின்றன. கூட்டுறவு மருந்தகம், அம்மா மருந்தகம் உள்ளிட்ட வழக்கமான மருந்தகங்களைப் போலவே இவையும் செயல்படுகின்றன. அவற்றில் எல்லா மருந்துகளுக்கும் 25 சதவீத தள்ளுபடியில் கிடைக்கும்.
மத்திய அரசின் மக்கள் மருந்தகத்தை நடத்துபவர் வெளியில் இருந்தும் மருந்துகளை வாங்கி விற்க முடியும். ஆனால், தமிழ்நாடு அரசின் திட்டத்தின் கீழ் மருந்துக் கடைகளை நடத்துபவர்கள் வேறு வகையில் மருந்துகளை வாங்கி விற்கக்கூடாது. எல்லா மருந்துகளும் கூட்டுறவு அமைப்புகள் மூலமாகவோ, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மூலமாகவோதான் விநியோகிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
முதல்வர் மருந்தகங்கள் மூலம் விற்கப்படும் மருந்துகளை பெறும்பாலான மருத்துவர்கள் பரிந்துரை செய்யாததால் மக்கள் மத்தியில் தேவையான வரவேற்பை பெறாமல் புறக்கணிக்கப்பட்டது. பெறும்பாலான மருத்தகங்கள் போதிய வியாபாரமின்றி நஷ்டத்தில் இயங்குவதால் கூட்டுறவுத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் கட்டாயம் இம்மருந்தகங்களில் தங்களுக்கு தேவையான மருந்துகளை வாங்கவேண்டும் என வாய்மொழி உத்தரவால் கட்டாயப்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தை ஒவ்வொரு நியாயவிலைக்கடை அருகே தனிப்பிரிவை அமைத்து, மக்களுக்கு தேவையான மருந்துகள் அனைத்தும் கிடைக்கும்வகையில் விரிவுபடுத்த வேண்டும். கூட்டுறவுத்துறையில் பணியாற்றுகிறார் என்பதற்காகவே அந்த ஊழியரை முதல்வர் மருந்தகத்தில்தான் மருந்துகள் வாங்கவேண்டும் என்பது அறமல்ல' என தெரிவித்துள்ளார்.
Follow Us