Ramadoss files a case in court against the Election Commission's decision of pmk
பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸூக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அன்புமணி தரப்பு பா.ம.க தான் உண்மையான பா.ம.க என தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்புமணி தரப்பு பா.ம.க தான் உண்மையான பா.ம.க என அன்புமணி சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு சில மாதங்களுக்கு கடிதம் எழுதியிருந்தது. அதற்கு தேர்தல் ஆணையம், அன்புமணியின் சென்னை தி-நகரில் உள்ள அலுவலகத்திற்கு பதில் கடிதம் எழுதியது. இதன் மூலம், பா.ம.கவும், பா.ம.கவின் மாம்பழம் சின்னமும் அன்புமணிக்கு தான் என அன்புமணி தரப்பினர் கூறி வந்தனர். அதனை தொடர்ந்து, பா.ம.வுக்கு நான் தான் தலைவர் என்றும், எனவே என் தலைமையிலான பா.ம.கவுக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என ராமதாஸ் தேர்தல் ஆணையத்துக்கு சில தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார்.
ஆனால் ராமதாஸின் கடிதத்தை நிராகரித்து, அன்புமணி தரப்பு பா.ம.க தான் உண்மையான பா.ம.க என்றும், அவர் தான் பா.ம.க தலைவர் என்றும் தேர்தல் ஆணையம் கடந்த நவம்பர் 28ஆம் தேதி அங்கீகரித்து அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க கவுரத் தலைவர் ஜி.கே.மணி, அன்புமணி போலி ஆவணத்தை கொடுத்து கட்சியை திருடிவிட்டதாகவும், அதற்கு தேர்தல் ஆணையமும் துணை போயிருக்கிறது என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், பா.ம.க தலைவர் அன்புமணி என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக ராமதாஸ் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. அந்த மனுவில், ‘தங்கள் தரப்பு அளித்த அசல் ஆவணங்களை முறையாக ஆராயமல் ஆணையம் தவறான முடிவு எடுத்துள்ளது. அன்புமணி கொடுத்த போலி ஆவணங்களை ஏற்று அவரை தலைவராக அங்கீகரித்தது தவறு’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us