பாமகவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதியன்று பாமகவின் தலைமை அலுவலகமான தைலாபுரம் தோட்டத்தில் அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூடியது. அதில், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால், அன்புமணி விளக்கமளிக்காததால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டது.
இத்தகைய பரபரப்பான சூழலில் தான் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக நிர்வாகிகள் கூட்டம் கடந்த 3ஆம் தேதி (03.09.2025) நடைபெற்றது. 22 பேர் கொண்ட பாமக நிர்வாகக் குழுவில் ராமதாஸின் மகள் காந்திமதியும் இடம்பெற்றிருந்தார். இந்தக் கூட்டத்தில், அன்புமணி 16 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்காதது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், “அன்புமணிக்கு ஆகஸ்டு 31 வரை விளக்கமளிக்கக் கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. எனவே அவருக்கு மீண்டும் அவகாசம் வழங்கப்படுகிறது. செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதிலளிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். இருப்பினும் அன்புமணி இதுவரை பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் 2வது முறையாக அன்புமணிக்கு விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட கடிதத்தின் மீதான காலக்கெடு இன்றுடன் (10.09.2025) நிறைவடைய உள்ளது. இதன் காரணமாக ஜி.கே. மணி, அருள்மொழி, தீரன், அன்பழகன் உள்ளிட்டோருடன் ராமதாஸ் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். எனவே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் அதன் மீதான இறுதி நடவடிக்கைகளை ராமதாஸ் எடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக ராமதாஸ் நாளை செய்தியாளர்களைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அன்புமணி மீதான நடவடிக்கை குறித்த அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.