பா.ம.க.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சித் தலைவர் பதவி மற்றும் அதிகாரம் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர, நிர்வாகிகள் மாற்றம் உட்படப் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். மறுபுறம், அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் பா.ம.க. பொதுக்குழுக் கூட்டம் கடந்த 9-ஆம் தேதி (09.08.2025) நடைபெற்றது. இதில் பா.ம.க.வின் தலைவராக அன்புமணியே நீடிப்பார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில், இன்று விழுப்புரம் பட்டானூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கூடியுள்ளது. இந்தக் கூட்டத்தில் ராமதாஸின் மகள் காந்திமதி கலந்துகொண்டுள்ளார். மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
பா.ம.க. பொதுக்குழுவில் பா.ம.க. விதிகளில் திருத்தம் உள்ளிட்ட 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், ‘சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்கும் அதிகாரம் ராமதாஸுக்கு வழங்கப்படுகிறது. ராமதாஸைத் தவிர வேறு யாரும் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது. அனைத்துத் தேர்தல்களிலும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் ராமதாஸுக்கு வழங்கப்படுகிறது. பொதுக்குழுவுக்கு நிறுவனர் அழைக்கப்பட வேண்டும் எனத் திருத்தம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றம். பா.ம.க. அமைப்பு ரீதியாக 35-ஆவது விதியைத் தொடங்கி தீர்மானம் நிறைவேற்றம். வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% தனி இட ஒதுக்கீட்டிற்கு சட்டம் இயற்றப்பட்டும் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு, பா.ம.க. நிறுவனர் தலைமையில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும். தமிழக அரசு தட்டிக் கழிக்காமல் உடனடியாக ஜாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’ உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதனிடையே, பொதுக்குழுவில் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாமகவில் பிளவை ஏற்படுத்தும் வகையில் அன்புமணி செயல்பட்டதாக, 16 குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறப்பு பொதுக்குழுவில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதன்மூலம் பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 'புதுச்சேரியில் நடத்தப்பட்டக் கூட்டம் பா.ம.க. பொதுக்குழு அல்ல: அதன் முடிவுகள் பா.ம.கவை கட்டுப்படுத்தாது!' என அன்புமணி தரப்பு பாமகவின் பாலு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாலு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்பு விதிகள் 15, 16 ஆகியவற்றின் அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உள்ளிட்ட எந்தக் கூட்டமும் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோரால் கூட்டப்பட்டு, பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவரின் தலைமையில் தான் நடத்தப்பட வேண்டும். அதன்படியான பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் நாள் மாமல்லபுரத்தில், பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் முறைப்படி நடத்தப்பட்டது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த தகவல் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், புதுச்சேரி பட்டானூரில் இன்று நடத்தப்பட்ட கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அல்ல. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பாட்டாளி மக்கள் கட்சியை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்பதை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை சார்பில் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.