பா.ம.கவில் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையிலான மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கட்சியின் சின்னம் மற்றும் பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என ராமதாஸ் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். ஆனால், தனது தலைமையிலான பா.ம.க தான் உண்மையான பா.ம.க என அன்புமணி பிரகடனப்படுத்தி கட்சியின் சின்னம் மற்றும் பெயரை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.

Advertisment

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க நிர்வாகக் குழு கூட்டம் இன்று (17-12-25) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ம.க பொதுச் செயலாளர் முரளி சங்கர், கெளரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சி குறித்தும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராமதாஸ், “அன்புமணி ராமதாஸ் அல்ல, அன்புமணி. அவருக்கு தலைவர் பதவி இல்லை. தேர்தல் ஆணையம் அவரை தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை, சின்னமும் கொடுக்கப்படவில்லை. நாங்கள் தொடுத்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் அதை உறுதி செய்தது. அன்புமணி தலைவர் அல்ல, நான் தான் தலைவர் என உறுதி செய்திருக்கிறது. இந்த நிலையில், பல மாதங்களுக்கு முன்பு அவரை இந்த கட்சியிலிருந்து நீக்கிவிட்டோம். கட்சியில் நீக்கிய பிறகு, கட்சியையோ கட்சியின் சின்னத்தையோ அல்லது என் பெயரையோ உபயோகப்படுத்த கூடாது என்று சொன்னேன். இது சம்பந்தமாக காவல்துறையினருக்கும், தலைமை செயலாளருக்கும் கடிதம் எழுதிருக்கிறோம். ஆனாலும் தொடர்ந்து அந்த தவறை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

பா.ம.கவின் உறுப்பினர் கூட இல்லாத அவர் வேட்பாளர் விருப்ப மனுவைப் பெறுகிறார். அந்த பொய்யர்கள் இதோடு நிறுத்தி கொள்ள வேண்டும். உங்களுக்கும் இந்த கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த கட்சியை உருவாக்கியவன், பாடுபட்டவன் நான். இந்த கட்சி இன்றைக்கு ஆலமரமாக வளர்ந்திருக்கிறது. அந்த ஆலமரத்தை அன்புமணி வெட்ட நினைக்கிறார். உன்னால் முடியாது. ஏனென்றால் ஒட்டுமொத்த மக்கள், என்னை வெகுவாக விரும்புகிறார்கள், ஆதரிக்கிறார்கள். இது கூட தெரியாமல் பம்மாத்து வேலை செய்து கொண்டிருக்கிறார். அதனால், இந்த வேலையை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

Advertisment

அந்த பம்மாத்து வேலை செய்பவர்களை இந்த நேரத்தில் நான் எச்சரிக்கிறேன். வேண்டாம் தம்பி, இந்த விபரீத விளையாட்டு. எப்போதும் மக்கள் உன்னை திட்டுவது உன் காதில் விழுந்தாலும் அதை நீ கண்டுகொள்வதில்லை. டெல்லி நீதிமன்றம் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. தவறு செய்த தேர்தல் ஆணையம் அதை புரிந்து கொண்டு சரியான தீர்ப்பை சொல்லியிருக்கிறது. வெற்றி கூட்டணியை நிச்சயமாக அமைப்பேன். நிர்வாகக் குழு அதற்கான முழு அதிகாரத்தை எனக்கு வழங்கியிருக்கிறது. அதற்கு அடுத்து நடக்கவிருக்கும் பொதுக்குழுவும் எனக்கு அதிகாரத்தை வழங்குவார்கள் என்று நம்பிக்கை உண்டு” என்று கூறினார்.