தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராங்கத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்டத் தொடக்க விழா இன்று (23-01-26) நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்து பங்கேற்க உள்ளார்.
பிரதமர் மோடி பங்கேற்கும் இவ்விழாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பங்குபெறும் கட்சிகள் பங்குபெறவுள்ளன. அந்த வகையில் அதிமுக, அமமுக, இந்திய ஜனநாயகக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், அன்புமணி தரப்பு பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் பங்குபெறவுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி பாதுகாப்பு பணிகள் தீவிரமாக போடப்பட்டுள்ளது. அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் இவ்விழாவில் தொண்டர்கள் அமர்வதற்கு 1.20 லட்சம் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பங்கேற்கும் இவ்விழா மேடையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் சின்னம் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, பா.ம.கவின் சின்னமான மாம்பழம், டிடிவி தினகரன் கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட குக்கர் சின்னம், அதிமுகவின் இரட்டை இலை, பா.ஜ.கவின் தாமரை உள்ளிட்ட சின்னம் இடம்பெற்றுள்ளது.
பா.ம.க கட்சி தொடர்பாகவும், அக்கட்சியின் சின்னம் தொடர்பாகவும் பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து இது தொடர்பாக நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், பா.ம.கவின் சின்னமான மாம்பழம் சின்னத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி மேடையில் இடம்பெற்றிருப்பது தற்போது பேசுபொருளாகி மாறியுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் பங்கேற்கும் கூட்டத்தில் மாம்பழம் சின்னம் இருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “பிரதமர் பங்கேற்கும் கூட்டத்தில் அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளது. இன்று மதுராந்தகத்தில் நடைபெறக்கூடிய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார தொடக்க விழாவில் நான் நிறுவிய பா.ம.கவின் வரலாற்று சின்னமான மாம்பழம் சின்னம் மேடையின் பின்னணியில் பயன்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்திய தேர்தல் ஆணையத்தினுடைய விதிமுறைகளின்படி, தற்போது பா.ம.கவுக்குள் நிலவும் தலைமை போட்டியால் மாம்பழம் சின்னம் குறித்து இன்னும் இறுதி முடுவெடுக்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ள ஒரு பிரிவினர் (அன்புமணி தரப்பு) தேர்தல் ஆணையத்தால் இன்னும் அங்கீகரிக்கப்படாத ஒரு சின்னத்தை நாட்டின் பிரதமரே பங்கேற்கக்கூடிய ஒரு பொதுக்கூட்ட மேடையில் காட்சிப்படுத்துவது என்பது சட்டவிரோதமானது, மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.
தேர்தல் ஆணையத்தின் வசம் நிலுவையில் இருக்கும் ஒரு சின்னத்தை மேடையில் பயன்படுத்துவது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. பிரதமர் பங்கேற்கக்கூடிய ஒரு நிகழ்வில், இத்தகைய சட்டவிரோத செயல்களை செய்வது பிரதமரின் பதவிக்கும் ஜனநாயக மரபுகளுக்கும் இழைக்கப்படக்கூடிய அவமரியாதையாகும். மாம்பழம் சின்னம் பா.ம.க தொண்டர்களின் அடையாளம், அது இன்னும் யாருக்கும் வழங்கப்படாத நிலையில் அதனை ஒரு குறிப்பிட்ட அணி தனக்கானதாக காட்டிக்கொள்வது தமிழக மக்களை ஏமாற்றக்கூடிய செயல். அரசியல் அறமற்ற இந்த செயலை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/23/mangoram-2026-01-23-14-47-10.jpg)