பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸூக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில் தற்போது வரை தீர்வு ஏற்படாத சூழல் நிறுவி வருகிறது. இதனிடையே, அன்புமணி தரப்பு பா.ம.க தான் உண்மையான பா.ம.க என அன்புமணி சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு சில மாதங்களுக்கு கடிதம் எழுதியிருந்தது. அதற்கு தேர்தல் ஆணையம், அன்புமணியின் சென்னை தி-நகரில் உள்ள அலுவலகத்திற்கு பதில் கடிதம் எழுதியது. இதன் மூலம், பா.ம.கவும், பா.ம.கவின் மாம்பழம் சின்னமும் அன்புமணிக்கு தான் என அன்புமணி தரப்பினர் கூறி வந்தனர்.
இதற்கிடையில், பா.ம.வுக்கு நான் தான் தலைவர் என்றும், எனவே என் தலைமையிலான பா.ம.கவுக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என ராமதாஸ் தேர்தல் ஆணையத்துக்கு சில தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் ராமதாஸின் கடிதத்தை நிராகரித்து, அன்புமணி தரப்பு பா.ம.க தான் உண்மையான பா.ம.க என்றும், அவர் தான் பா.ம.க தலைவர் என்றும் தேர்தல் ஆணையம் கடந்த 28ஆம் தேதி அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க கவுரத் தலைவர் ஜி.கே.மணி, அன்புமணி போலி ஆவணத்தை கொடுத்து கட்சியை திருடிவிட்டதாகவும், அதற்கு தேர்தல் ஆணையமும் துணை போயிருக்கிறது என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தை கண்டித்து போராட்டம் நடத்தவுள்ளதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, “நான் 1980-ல் இயக்கம் தொடங்கி இன்று வரை 46 ஆண்டுகள் கட்சி நடத்தி வருகிறேன். கடந்த காலத்தில் சாலை வசதி, மின்சார வசதி இல்லாத நிலையில் வயல் வரப்பில் நடந்து சென்றோம். இராந்தல் விளக்கு பிடித்தும் பல கூட்டங்களில் பேசி 96 ஆயிரம் கிராமங்களுக்குச் சென்று கட்சி வளர்த்து சமூக நீதியை உயிர் மூச்சு கொள்கையாகக் கொண்டு மக்கள் மேம்பட ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு குரல் கொடுத்தும் போராடியும் வருகிறேன். நான் தொடங்கிய பா.ம.கவுக்கு பேராசிரியர் தீரன் தலைவராக இருந்து செயல்பட்டார். அடுத்து ஜி.கே.மணி 25 ஆண்டு காலம் தலைவராக செயல்பட்டு வந்தார். அடுத்து அன்புமணி தலைவராக விரும்பியதால் சென்னை அடுத்துள்ள திருவேற்காடு ஜிபிஎன் பேலஸில் 28.5.2022 அன்று பொதுக்குழுவை கூட்டி தலைவராக தேர்ந்தெடுத்து அறிவித்தேன். ஆனால் அன்புமணி சதி திட்டம் தீட்டி 2023 பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக போலியான ஆவணங்களை டில்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் கொடுத்து தேர்தல் ஆணையத்தை கையில் போட்டுக்கொண்டு 2026 வரையில் பதவியில் நீடிப்பதாக தேர்தல் ஆணையம் கடிதம் கொடுத்துள்ளது. இது மிகப்பெரிய கண்டனத்துக்குரியது.
இது தேர்தல் ஆணையத்தின் மோசடியான துரோக நடவடிக்கை. தேர்தல் ஆணையம் அன்புமணிக்கு உடந்தையாக உள்ளது. அன்புமணி கட்சியை என்னிடமிருந்து சூழ்ச்சியால் பறித்துக் கொண்டது கட்சி திருட்டு செயல். தேர்தல் ஆணையம் கட்சியை என்னிடமிருந்து பறித்து அன்புமணிக்கு திருடி கொடுத்துள்ளது. இப்படி எனது கட்சியை பறித்துக்கொண்டது என் உயிரை பறித்ததாகும். 46 ஆண்டு காலம் உழைத்து போராடிய என்னிடமிருந்து பறித்துக் கொண்டது சொல்ல முடியாத உயிர் பரிபோன செயல் கண்ணீர் வடிக்கிறேன். கலங்கி நிற்கிறேன். இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். எனது கட்சி என் கைக்கு வரும் என நம்பிக்கையோடு இருக்கிறேன். தேர்தல் ஆணையத்தின் மோசடியான கட்சியை திருடி கொடுத்த ஜனநாயக படுகொலையை கண்டித்து நீதிகேட்டு பாமக சார்பில் வரும் 2ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் பா.ம.க கௌரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அடுத்து தேர்தல் ஆணையத்தின் மோசடி நடவடிக்கையை கண்டித்தும், நீதிகேட்டும் புது டெல்லியில் 04.12.2025 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு போராட்டம் நடத்தப்படும். தமிழ்நாட்டிலிருந்து பா.ம.க.வினர் போராட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி செல்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/30/ramam-2025-11-30-21-54-58.jpg)