விழுப்புரம் தைலாபுரத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இன்று (02-10-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் என்ற திருக்குறளை நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள். இன்று மகிழ்ச்சியான நாள். நான் அதிகம் நேசிக்கின்ற பிள்ளைகளில் ஒரு பிள்ளை தமிழ்க்குமரன். அவரை, இன்றைக்கு பா.ம.க மாநில இளைஞர் சங்கத் தலைவராக நியமனம் செய்கிறேன். இவருக்கு ஏற்கெனவே இந்த பொறுப்பு வழங்கப்பட்டது. இதே போல், நியமன கடிதம் இங்கு கொடுத்தேன். இந்த வாசப்படி போவதற்குள், தமிழ் குமரன் அன்புமணிக்கு போன் செய்து இந்த மாதிரி பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது, உங்களிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்று சொல்லிருக்கிறார். உடனே அன்புமணி, இதை ஏற்றுக்கொள்ள முடியாது நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்லிருக்கிறார். மறுபக்கத்தில் இருந்து எதிர்ப்பு வந்ததால் பதறிபோன இந்த பிள்ளை, என்னிடம் வந்து சொன்னார். நானும் பதறிப்போய், ராஜினாமா செய்ய வேண்டாம் என்றேன்.

Advertisment

2 மாதம் கழித்து கட்சியினுடைய பொதுக்குழு நடந்தது. அந்த பொதுக்குழுவில், கலந்துகொள்வதற்காக ஒரு நாள் முன்னாடியே தமிழ் குமரன் தன்னுடைய குடும்பத்தினரோடு பாண்டிச்சேரியில் ஒரு அறை எடுத்து தங்கியிருக்கிறார். பொதுக்குழு கூடுகின்ற காலை வேளையில் தமிழ்க்குமரன் வரக்கூடாது என்று எனக்கு ஒரு போன் வருகிறது. இதனை நானும், தமிழ்க்குமரனிடம் சொல்லிவிட்டேன். ஆனால், என்னுடைய மனம் நொந்துபோனது. தமிழ் குமரனும் அந்த பொதுக்குழுவில் வராமல் பாண்டிச்சேரியில் இருந்து தன்னுடைய ஊருக்குக் கிளம்பிவிட்டார். 2 மாதங்கள் கழித்து, நியமன கடிதத்தை கிழித்து போட்டுவிடு என்று தமிழ் குமரனிடம் சொன்னேன். அதன் பிறகு, அந்த பதவி என்னுடைய மூன்றாவது பேரன் முகுந்தனுக்கு கொடுக்க வேண்டும் என்று பொதுக்குழுவில் அறிவித்தேன். அப்போது தான், மைக் என் மேல் பாய்ந்தது.

Advertisment

இப்போது அந்த பொறுப்பை, தமிழ்க்குமரனுக்கு வழங்கியிருக்கிறேன். அவர் சிறப்பாக செயல்படுவார், சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நாம் அனைவரும் வாழ்த்துவோம். ஒரு கட்சியில், ஒரு பொறுப்பை நான் விரும்பி கொடுக்கிறேன் என்று சொன்னால் இவரையும் ஏற்றுக்கொள்ளவில்லை, சொந்த அக்கா பையனையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த பொறுப்பு அப்படியே காலியாக இருந்தது. இப்போது அந்த பொறுப்பு நிரப்பப்பட்டிருக்கிறது. பேஸ்புக், டிவிட்டர் போன்ற தளங்களில் என்னைப் பற்றி தவறாக எழுதி வருகிறார்கள். இப்படி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த பையன், என்னை கொல்வது போன்ற பதிவு போடுகிறான். இந்த பதிவு போட்ட அந்த பையனுக்கு, வேறு ஒரு கட்சியில் மாநில இளைஞர் சங்கத்தில் பதவி கொடுக்கிறார்கள். இப்படி, கடந்த 2 மாதங்களாக அக்கப்போராகவும், அபத்தமாகவும், அசிங்கமாகவும், அறுவறுத்தக்கமாகவும் எழுதுவதை சிலர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இதற்கா சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கண்டுபிடித்திருக்கிறார்கள்?. கண்டுபிடித்த விஞ்ஞானிகள் எல்லாம், இந்த பதிவுகளை பார்த்தால் வெட்கி தலை குணிவார்கள்.

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு என்னுடைய இரங்கலை தெரிவிக்கிறேன். இனி அரசியல் கட்சி கூட்டம் நடத்துபவர்களும், வேறு கூட்டங்கள் நடத்துபவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதற்கு காவல்துறை வழிகாட்ட வேண்டும். இது போன்ற துயர சம்பவங்கள் நடக்காமல் கட்சித் தலைவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

Advertisment

முன்னதாக பா.ம.க சட்டமன்றக் குழுத் தலைவரான தமிழ்க்குமரனின் தந்தை ஜி.கே.மணியை மாற்றக் கோரி அன்புமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் சதாசிவம், வெங்கடேஸ்வரன், சிவக்குமார் ஆகியோர் சட்டப்பேரவைச் செயலாளரை சந்தித்து மனு அளித்தனர். அதனை தொடர்ந்து பா.ம.க சட்டமன்ற கொறடாவாக சிவக்குமாரும், பா.ம.க சட்டமன்றக் குழுத் தலைவராக வெங்கடேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அன்புமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.