பா.ம.க.வில்  அக்கட்சியினர் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நிர்வாகிகள் மாற்றம் உட்படப் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார்.

தற்போது வரை ராமதாஸ்-அன்புமணி இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறையைச் சேர்ந்த பாமக தொண்டர் ஒருவர் ராமதாஸும்  அன்புமணியும் தனியாக சந்தித்துப் பேசி மீண்டும் இருவரும் ஒன்றாக வேண்டும். இல்லையென்றால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை சேர்ந்த அந்த நபர் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில், ''மனசு ரொம்ப வேதனையாக இருக்கிறது சார். இருவரும் இணைய வேண்டும். 46 வருடமாக பாமக கட்சியில் இருக்கிறேன். அவர்களுக்கிடையே உள்ள பிரச்சனைக்குள் நான் போக விரும்பவில்லை. ராமதாஸும், அன்புமணியும் தனியாகச் சந்தித்துப் பேசிக்கொள்ள வேண்டும். வேறு யாரும் உடன் இருக்கக் கூடாது. இருவர் மட்டும் சந்தித்து பேசிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்'' என்றார்.

அங்கிருந்த காவல்துறையினர் தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு சிறிய சலசலப்பு ஏற்பட்டது.