கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாக அன்புமணி மீது ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற ஒழுங்கு நடவடிக்கை குழு பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து அன்புமணி பதிலளிக்க அவகாசம் கொடுத்திருந்தது. ஆனால் அன்புமணி தரப்பில் எந்த பதில்களும் கொடுக்கப்படவில்லை.
தொடர்ந்து நேற்று (11/09/2025) விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ் பேசுகையில், ''எந்த அறிவுரையும் அன்புமணி கேட்கவில்லை. எனவே பாமகவின் செயல் தலைவர் பொறுப்பில் இருந்து அவரை நீக்கி நடவடிக்கை எடுக்கிறேன். தந்தை சொல்வதைக் கேட்டு நடந்து கொள்வதில் தவறில்லை. பாமக செயல் தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கம் செய்யப்படுகிறார். பாமக நிர்வாகிகள் யாரும் அன்புமணியுடன் தொடர்பில் இருக்கக்கூடாது. விதிப்படி நிறைய வாய்ப்புகள் கொடுத்த பிறகு அன்புமணி மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த முடிவால் பாமகவிற்கு எந்த பின்னடைவும் இருக்காது. வளர்ச்சிக்கு தடையாக இருந்த களையை நீக்கிவிட்டேன்'' என தெரிவித்திருந்தது பரபரப்பைக் கூட்டியிருந்தது.
அதேநேரம் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ஆதரவாளரான வழக்கறிஞர் பாலு, ராமதாஸின் அறிவிப்பு பாமகவை கட்டுப்படுத்தாது என தெரிவித்திருந்தார். பாமகவின் தலைவராக அன்புமணியே நீடிப்பார் எனவும் தெரிவித்திருந்தார். ராமதாஸின் இந்த அறிவிப்பு காரணமாக அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தை யார் பயன்படுத்துவது என்பது தொடர்பாக பாமகவின் ராமதாஸ் தரப்பினருக்கும், அன்புமணி தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அலுவலகம் பூட்டப்பட்டது. மோதல் போக்கு காரணமாக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.