பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நிர்வாகிகள் மாற்றம் உட்பட பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அன்புமணியும் நீக்கப்பட்டவர்களுக்கு அதே பதவியை கொடுத்தும், தனக்கு ஆதரவான மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள், மாநில நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆதரவு பா.ம.க மாவட்டச் செயலாளர்களிடையே மோதல் ஏற்பட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் புறவழிச்சாலை பகுதியில் அன்புமணி ஆதரவு மாவட்டச் செயலாளர் செழியன் என்பவர் பெட்ரோல் பங்க் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த பெட்ரோல் பங்கிற்கு, டீசல் போடுவதற்காக இன்று காலை ராமதாஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் என்பவர் வந்துள்ளார். டீசல் போட்ட பின்னர், ராஜ்குமார் தரப்பினர் பணம் கொடுக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், பெட்ரோல் பங்க் ஊழியருக்கும் ராஜ்குமாருடன் காரில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அறிந்த செழியன், பெட்ரோல் பங்கிற்கு வந்து ராஜ்குமாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த திருக்கோவிலூர் போலீசார் அங்கு வந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். பா.ம.கவில் தந்தை மகன் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில், பா.ம.கவைச் சேர்ந்த இரண்டு அணியினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.