Ramadoss alleged on AIADMK-PMK alliance
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதி பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை இன்று (07-01-26) காலை பா.ம.க தலைவர் அன்புமணி சந்தித்துப் பேசியுள்ளார். சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை அன்புமணி இன்று சந்தித்து பேசினார். சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக பேசிய இருவரும், கூட்டணியை உறுதி செய்தனர்.
இந்த நிலையில், அன்புமணியிடம் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு பாம.க கட்சிக்கு ராமதாஸ் மட்டுமே நிறுவனத் தலைவராக இருந்து கட்சியை வழிநடத்தி வருகிறார். கடந்த 17.12.2025 முதல் ராமதாஸே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பாமக கட்சியுடன் தேர்தல் கூட்டணி என்று அன்புமணியுடனோ அல்லது வேறு எவரிடமோ எந்த அரசியல் கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த இயலாது. ராமதாஸ் மட்டுமே செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் தேர்தல் கூட்டணி பேசும் அதிகாரம் பெற்றவர்.
இந்நிலையில் அன்புமணி பா.ம.க சார்பாக தேர்தல் கூட்டணி பேசியதாக செய்தி வெளியாகி உள்ளது. அந்த தகவல் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். அப்படி ஒரு கூட்டணி பேச்சு நடந்திருந்தால் அது சட்ட விரோதம். கட்சி விதிப்படி ராமதாஸ் மட்டுமே யாருடனும் கூட்டணி பேச உரிமை உள்ளவர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us