Ramadas's sensational complaint Anbumani is committing money fraud in the name of Preference petition
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கணக்குகள், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், பரப்புரை என அடுத்தடுத்து தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன.
இதனிடையே, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் விருப்ப மனு பெறும் பணியை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. கடந்த 10ஆம் தேதி 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான விருப்ப மனு விநியோக பணியை தமிழக காங்கிரஸ் தொடங்கியது.
இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகத்தை அன்புமணி தரப்பு பா.ம.க இன்று (14-12-25) தொடங்கியுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது புதுவையில் 30 தொகுதிகள் என மொத்தம் 264 தொகுதிகளில் பா.ம.க சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் அன்புமணி தரப்பு பா.ம.கவினர் விருப்ப மனு விநியோக பணியை இன்று தொடங்கியுள்ளனர். இன்று காலை 11 முதல் வரும் 20ஆம் தேதி மாலை 6 மணி வரை விருப்ப மனுக்கள் வழங்கப்பட இருப்பதாகவும், 20ஆம் தேதி மாலைக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் என்று பா.ம.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போட்டியிட விரும்புவோர் பொது தொகுதிக்கு ரூ.10,000ம், தனித் தொகுதிக்கு ரூ.5,000ம் செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், விருப்ப மனு என்ற பெயரில் அன்புமணி பண மோசடி செய்வதாக ராமதாஸ் தரப்பு பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் டிஜிபியிடம் இது குறித்து அளித்த புகாரில், ‘பா.ம.க பெயரையோ, கட்சியையோ அன்புமணி பயன்படுத்த உரிமை இல்லை. விருப்ப மனு அளிக்க பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கு மட்டுமே உரிமை உள்ளது. என்வே விருப்ப மனு என்ற பெயரில் அன்புமணி பண மோசடி செய்கிறார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us