தைலாபுரம் தோட்டத்துக்கும், ராமதாஸ் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என ராமதாஸ் தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisment

பா.ம.க.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சித் தலைவர் பதவி மற்றும் அதிகாரம் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. இதனிடையே, அன்புமணியை பா.ம.க செயல் தலைவர் பதவியில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டார். இதன் காரணமாக, பாமக 2 அணியாகப் பிளவுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும் தீர்வு எட்டப்படாத சூழலே நீடிக்கிறது.

Advertisment

இந்த நிலையில், பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என எம்.எல்.ஏ அருள் தலைமையிலான ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏக்கள் இன்று (25-09-25) சென்னையில் தலைமைச் செயலரை சந்தித்து மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், ‘எங்கள் கட்சியில் சமீபகாலமாக நெருக்கடியான சூழலும், குழப்பங்களும் நிலவி வருவதை தாங்கள் நன்கு அறிவீர்கள். பா.ம.கவை தொடங்கிய ராமதாஸ் தொடர்ந்து 46 ஆண்டு காலம் இயக்கம் நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் பா.ம.கவினர் மத்தியிலும், பொதுமக்கள், அனைத்து கட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மத்தியிலும் அரசியலில் மூத்த தலைவர் ராமதாஸ் மக்கள் மேம்பாட்டுக்கு ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு வருபவர் என்பதை அனைவரும் அறிவர்.

ராமதாஸ், பா.ம.கவின் நிறுவனர் மற்றும் தலைவராக செயல்பட்டு வருகிறார். தற்போதைய பா.ம.கவின் நெருக்கடியான குழப்பமான சூழ்நிலையில் ராமதாஸ் அடிக்கடி வெளியூர் நிகழ்ச்சிகளுக்குச் சென்று வருவதால் அவருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு போதுமானதாக இல்லை. எனவே, அவருடைய பாதுகாப்பு கருதி முழு நேரமும் ராமதாஸ் வசித்து வரும் தைலாபுரம் தோட்டம் மற்றும் அவர் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் இடங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும், தைலாபுரம் தோட்டத்திற்கு ராமதாஸை சந்திக்க வருவோர் அனைவரையும் பரிசோதனை செய்து உள்ளே அனுமதிக்கும் வகையில் நுழைவாயிலில் பரிசோதனை கருவி (Metal detector) அமைத்திட கேட்டுக்கொள்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment