இந்திய அரசுக்கு சொந்தமான எரிசக்தி நிறுவனமான கெயில் இந்தியா லிமிடெட் கம்பெனிக்கு சிறப்பு வழக்கறிஞராக ராஜபாளையத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் ராம் சங்கர் மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

கெயில் இந்தியா நிறுவனம் கேஸ், எல்பிஜி, எரிவாயு, சூரிய சக்தி, காற்றாலை மின்சாரம் ஆகிய உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியவற்றில் இந்தியா முழுவதும் ஈடுபட்டுள்ளது. வழக்கறிஞர் டாக்டர் ராம் சங்கரை கெயில் நிறுவனத்தின் சிறப்பு வழக்கறிஞராக நேற்று அந்த நிறுவனத்தின் பொதுமேலாளர் வெங்கடேசன் அறிவித்துள்ளார்.

டாக்டர் ராம் சங்கர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பிறந்தவர். 2012 ஆம் ஆண்டு முதல் இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். பல்வேறு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளுக்கும் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். சட்டப் படிப்பில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். சட்டப் படிப்பில் ஆராய்ச்சி செய்து இந்தியாவில் "கொலிஜியம்" எனப்படும் அமைப்பு எவ்வாறு உயர் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளை எவ்வாறு நியமிக்கிறார்கள் என்பதை ஆராய்ந்து அதில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.