உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு.. நேற்று வழக்கம்போல் கூடியது. அப்போது, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் வழக்கு ஒன்றில் விசாரணை நடத்திக்கொண்டிருந்தபோது.. அங்கிருந்த வழக்கறிஞர் ஒருவர் திடீரென தனது ஷூவை கழற்றி தலைமை நீதிபதியை வீசியுள்ளார். இதனால் உச்ச நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
மேலும், அந்த நபர் நீதிமன்றத்துக்குள் கோஷங்கள் எழுப்பத் தொடங்கியதும், பாதுகாப்பு பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு அவரை நீதிமன்ற அறையிலிருந்து வெளியே அழைத்துச் சென்றனர். இதனிடையே, அவரை வெளியேற்றும் போது, “சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது" என்று கோஷம் போட்டுக்கொண்டே சென்றுள்ளார்.
அப்போது, நீதிமன்றத்துக்குள் குழப்பமான சூழல் நிலவிய போதிலும், தலைமை நீதிபதி கவாய் மிகவும் அமைதியுடனும், நிதானத்துடனும் தனது அடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். மேலும் ஒரு வழக்கறிஞரிடம், அடுத்த வழக்கு குறித்த விவரங்களை சமர்ப்பிக்குமாறு கூறியதுடன், “கவனம் சிதற வேண்டாம். இந்த நிகழ்வால் நான் திசைதிருப்பப்படவில்லை” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில்.. தலைமை நீதிபதியைத் தாக்க முயன்றவர் வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பது தெரியவந்தது. மேலும், போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட ராகேஷ் கிஷோர் வழக்கறிஞராகப் பணியாற்றத் தடை விதித்து இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இந்த சூழலில், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த ராகேஷ் கிஷோர், “செப்டம்பர் 16 அன்று தலைமை நீதிபதியின் அமர்வில் கஜுராஹோவில் உள்ள ஜவாரி கோயிலில் உள்ள விஷ்ணுவின் சிலையை மீட்டெடுக்கக் கோரிய பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதி கவாய், 'சிலையை மீட்டெடுக்க கடவுளிடம் சென்று பிரார்த்தனை செய்யுங்கள்' என்று கேலி செய்து மனுவைத் தள்ளுபடி செய்தார். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு என்னை காயப்படுத்தியது. நான் செய்தது அவரது செயலுக்கான எனது எதிர்வினை. நான் அதற்காக பயப்படவில்லை, எனக்கு எந்த வருத்தமும் இல்லை. கடவுள் சொல்லித்தான் அவரைத் தாக்க முயன்றேன். நான் அதற்காக மன்னிப்பு கேட்கமாட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.