மறைந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி இன்று (04-01-25) சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஏவிஎம் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஏவிஎம் சரவணனின் நினைவு படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்று ஏவிஎம் சரவணனின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், “சிந்தனையில் தூய்மை, செயலில் தூய்மை, பேச்சில் தூய்மை அது தான் ஏவிஎம் சரவணன். 1975இல் ஏவிஎம் செட்டியாரையும், ஏவிஎம் சரவணனையும் தூரத்தில் நின்று பார்த்தேன். ஏவிஎம் புரொடக்ஷன் படங்களை தயாரித்து 8 வருடத்திற்கு பிறகு, மீண்டும் திரைத்துறைக்கு வந்து 1980இல் முரட்டு காளை படத்தை அவர்கள் தயாரித்தார்கள். அந்த படத்தில் நான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ஏவிஎம் செட்டியார் சொன்னதாக நான் கேள்விபட்டேன். இதையறிந்து நான் ஏவிஎம் சரவணண் அலுவலகத்திற்கு சென்று அவரை சந்தித்தேன். அந்த அலுவலகம் அவ்வளவு சுத்தமாக இருந்தது.
நான் எத்தனையோ அரசியல்வாதிகள், திரைத்துறையினர், பிரபலங்கள் அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் ஏவிஎம் சரவணனின் அலுவலகம் போல் எதுவும் இல்லை. அவ்வளவு நல்லா இருந்தது. நான் அவருடைய புரொடக்ஷனில் 11 படம் பண்ணிருக்கேன். அதில் 9 படம் எஸ்.பி முத்துராமன் இயக்கிருக்கிறார். ஒவ்வொரு படத்தின் கதையை நாம் கேட்கவே வேண்டும், அனைத்தையும் அவரே எல்லாம் முடிவு செய்வார். எந்த எந்த நடிகருக்கு எந்த மாதிரியான கதை அமைக்க வேண்டும் என்று கதையை முடிவு செய்து திரைக்கதை, இசை, எடிட்டிங் என எல்லாவற்றிலும் கை தேர்ந்து முடிவு செய்வார். ஆனால் இது யாருக்கும் தெரியாது.
ஏவிஎம் சரவணன், சினிமா மட்டுமல்ல தனிப்பட்ட முறையிலும் எனக்கு நிறைய உதவி செய்திருக்கிறார். வயது ஆக ஆக ஆக்ட்டிவாக இருக்க வேண்டும், அதனால் வருடத்திற்கு குறைந்தது ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஏவிஎம் சரவணன் என்னிடம் சொன்னார். இப்பவும் நான் செய்து வருகிறேன். அவருக்கு திரைத்துறையை மீறி வெளியே கூட மரியாதை இருக்கிறது. அவர் எந்த அரசியலிலும் சார்ந்தவர் இல்லை. இருந்தாலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் ஆகியோருடன் நெருக்கமாக பழகினார். சிவாஜி படம், அரசியல்வாதிகளுக்கு எதிராக எடுத்த படம். இருப்பினும், கலைஞர் அந்த படத்தை பார்த்தது மட்டுமல்லாமல் அந்த படத்தின் வெற்றி விழாவிலும் கலந்து கொண்டார். அதற்கு காரணம் ஏவிஎம் சரவணன் மட்டும் தான். அதுபோல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய நிறைய வேலைகளை விட்டுவிட்டு இங்கு வந்திருக்கிறார் என்றால் அது ஏவிஎம் சரவணன் மீது வைத்திருந்த அன்பு தான் காரணம்.
அசையும் சொத்தவிட அசையாத சொத்துக்கு தான் எப்போதுமே விலை அதிகம், மதிப்பு அதிகம். அது மாதிரி நம் வாழ்க்கையில் நம்மை விரும்புகிறவர்கள், நம் மீது அக்கறை கொண்டவர்கள் ஒரு சில பேர் தான் இருப்பார்கள். அவர்களெல்லாம் அசையாத சொத்துக்கள். எனக்கு அசையாத சொத்துக்களாக கே.பாலசந்தர், சோ, பஞ்சு அருணாச்சலம், ஆர்.எம்.வீரப்பன், ஏவிஎம் சரவணன், கலைஞர் இருக்கிறார்கள். காலத்தின் கட்டாயமாக என தெரியவில்லை. நம் யாரை விரும்புகிறோமோ, நம் யாரை மிகவும் மதிக்கிறமோ அவர்களை காலம் சீக்கிரமாக கொண்டு போய்விடுகிறது. நமக்கு எவ்வளவு பேர், புகழ், சொத்து, குடும்பம் இருந்தால் கூட அந்த மாதிரி மனிதர்கள் ஒவ்வொருவரும் நம்மை விட்டு பிரியும் போது அநாதையாக உணர்கிறேன்” என்று உணர்ச்சி பொங்க பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/04/rajiniavm-2026-01-04-12-05-33.jpg)