Rajinikanth releases video for tamilnadu agricultural university students meeting
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 1975, 1979ஆம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் காணொளி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.
அதில் அவர் கூறியதாவது, “அனைவருக்கும் வணக்கம். கிட்டத்தட்ட 50 வருடத்திற்கு பிறகு எல்லோரும் சந்திப்பு நடத்திருக்கிறீர்கள். பழைய நண்பர்களை பார்க்கும் போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று எனக்கும் தெரியும். உங்கள் யுனிவர்சிட்டியில் இருந்து எத்தனையோ பேரு படித்து பெரிய பெரிய ஆளாக இருப்பீர்கள். எனக்கு தெரிந்தவர்கள் இந்த யுனிவர்சிட்டியில் தான் படித்து பெரிய பதவியில் இருக்கிறார்கள். முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு, முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு, என்னுடைய சம்பந்தி இந்த மாதிரி நிறைய பேர் பெரிய பெரிய சாதனை செய்துள்ளீர்கள்.
பெரிய ஆள் ஆக ஆக நண்பர்கள் தான் நமக்கு ரொம்ப முக்கியம். அவர்களிடம் இருந்து என்ன வேண்டுமானாலும் கிடைக்கும். பழைய நண்பர்கள் கிடைப்பது ரொம்ப ரொம்ப அபூர்வம். என்னை சார், மாமா, மச்சான், தாத்தா, அப்பா, அங்கிள் என்று கூப்பிட்டாலும் கூட டேய் வாடா, டேய் எப்படிடா இருக்க, பேர் சொல்லி அப்படி கேட்கும் போது தான் அதிகமாக சந்தோஷம் கிடைக்கும். அது அசாதாரணமான சந்தோஷம்.
நான் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் கூட 6 மாதத்திற்கு ஒருமுறை பெங்களூர் சென்று பழைய டிரைவர், நடத்துனர்களை எல்லாம் சந்திப்பேன். சிவாஜி என்ற பெயரை கூட நான் மறந்துவிட்டேன். ஆனால், அவர்கள் கூட இருக்கும் போது டேய் சிவாஜி, எப்படிடா இருக்கன்னு சொல்வார்கள். அதை கேட்கும்போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். அதனால், நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தால் கூட 6 மாதத்திற்கு ஒருமுறையாவது பழைய நண்பர்களை சந்தியுங்கள். அப்போது பெரிய புத்துணர்ச்சியாக இருக்கும்” என்று கூறினார்.
Follow Us