Rajinikanth greets fans on Diwali
இந்தியா முழுவதும் இன்று (20-10-25) தீபாவளி பண்டிகை உற்சாகத்துடனும், விமர்சையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தையொட்டி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். அண்டை வீட்டார் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர். மேலும், கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தினத்தையொட்டி, நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் இன்று ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். உடனடியாக வீட்டை விட்டு வெளியே வந்த ரஜினிகாந்த், தனது ரசிகர்களைப் பார்த்து கையசைத்து தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அதன் பின்னர் அவர், “அனைவருக்கும் என்னுடைய தீபாவளி வாழ்த்துக்கள். எல்லாரும் சந்தோஷமாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என ஆண்டவரை வேண்டுகிறேன்” எனத் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களை அவருடைய இல்லத்தில் சந்திப்பது வழக்கம். அந்த வகையில் இன்றைய தினம் தீபாவளி பண்டிகையை ஒட்டி அனைவரையும் சந்தித்து ரசிகர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அதே போன்று ரசிகர்கள், ரஜினிகாந்த்தை பார்த்ததும் கோஷங்களை எழுப்பி அவருக்கு தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். மேல்ம், கையில் கொண்டு வந்த புத்தாடைகள், பொன்னாடைகள் உள்ளிட்டவற்றையும் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் கொடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.