கங்கைக்கரை வரை சென்று படையெடுத்து வடவர்களை வென்று, கங்கை கொண்ட சோழன் என்ற பட்டத்தைப் பெற்ற இராசேந்திரசோழன், அதன் நினைவாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற தலைநகரையும், அதில் சோழீஸ்வரர் (பிரகதீஸ்வரர்) திருக்கோயிலையும் அமைத்ததுடன், வடபுலத்தில் வென்ற மன்னர்களை பொன்குடங்களில் கங்கை நீரை சுமந்து வரச் செய்து, கொள்ளிடம் ஆற்றின் வடக்கில் ஏரிப்பாசனத்தை மேம்படுத்த 16 மைல் நீளமும் 3 மைல் அகலமும் கொண்ட சோழகங்கம் என்ற பரந்து விரிந்த ஏரியை உருவாக்கி, அதில் பொன்குடங்களில் கொண்டு வந்த கங்கை நீரை கொட்டச் செய்தார்.
கொள்ளிடத்திலிருந்து கால்வாய் அமைத்து, சோழகங்கத்திற்கு(பொன்னேரிக்கு) நீர் கிடைக்கச் செய்தார். பொன்னேரியின் வடிகாலாக அமைந்திருப்பதுதான் சென்னைக்கு குடிநீர் வழங்கும் புகழ்பெற்ற வீராணம் (வீரநாராயண) ஏரி ஆகும். கடற்படை மூலம் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் புலிக்கொடியை பறக்கவிட்ட இராசேந்திர சோழ மன்னனின் அரசு நிர்வாகம், நீர் மேலாண்மை, படைபலம் ஆகியவற்றைப் போற்றும் வகையில் ஆடி திருவாதிரை நாளில் மாமன்னன் இராசேந்திர சோழனின் பிறந்தநாளை அரசு விழாவாக தமிழக அரசு கொண்டாடி வருகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/23/a4521-2025-07-23-20-18-37.jpg)
ஜூலை 23-ந்தேதி மாமன்னன் அவரது பிறந்தநாள் விழா அரியலூர் மாவட்டத்தில் உள்ள சோழர்காலத் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் பெ. சாமிநாதன், நிதி மற்றும் சுற்றுசூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம்.தென்னரசு, சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கா.மணிவாசன், அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்புடன் தமிழ்நிலத்தின் பண்பாட்டு அடையாளங்களை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது.
இராசேந்திர சோழன் உருவாக்கிய சோழகங்கம் (பொன்னேரி) ஏரியில் 12 கோடி ரூபாய் மதிப்பில் நீர்வள மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அத்துடன், சோழகங்கம் ஏரிப்பகுதியை சுற்றுலா தலமாக்க ரூ 7.25 கோடியில் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இராசேந்திர சோழனின் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் 10 ஏக்கர் பரப்பளவில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளும், கங்கைகொண்ட சோழபுரம் அருகில் உள்ள மாளிகைமேடு பகுதியில் அகழாய்வுகளும் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள ஆடித் திருவாதிரை திருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த தினத்தையும், தென்கிழக்கு ஆசியாவில் அவரது கடல்சார் பயணத்தின் 1000-வது ஆண்டையும், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலின் கட்டுமானத் தொடக்கத்தை நினைவுகூறும் வகையிலும் ஆடித் திருவாதிரை திருவிழாவாக ஜூலை 23 முதல் ஜூலை 27 வரை மத்திய அரசு கலாச்சார அமைச்சகம் கங்கைகொண்ட சோழபுரத்தில் கொண்டாடுகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/23/a4523-2025-07-23-20-19-07.jpg)
இதில் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் தஞ்சாவூரில் உள்ள தென்மண்டல கலாச்சார மையத்தின் பயிற்சி பெற்ற மாணவர்களின் தேவாரம் திருமுறை மற்றும் கலாஷேத்ரா கலைஞர்களின் கலை நிகழ்ச்சி உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகளுடன் 23-ம் தேதி மாலை தொடங்கியது. இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் சோழ சைவம், கோயில் கட்டடக்கலை பாரம்பரிய நடைபயணம் மற்றும் வழிகாட்டுதலுடன் கூடிய பயணங்கள் குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
ஜூலை 27-ந் தேதி முற்பகலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ள தேவாரம் பாடல்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்படவுள்ளது. 27-ம் தேதி அன்று கலாஷேத்ராவின் பரதநாட்டிய குழு நிகழ்ச்சியும், பாரம்பரியமிக்க ஓதுவார்கள் குழு தேவாரம், திருமுறை ஓதும் நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளது. அத்துடன் பத்மபூஷன் இளையராஜா மற்றும் அவரது குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.