விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் கலகலப்பாகப் பேசினார் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. அதாவது “எம்ஜிஆர் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்று சிலர் பேசுகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் ஆட்சியை உருவாக்கவும், மீண்டும் கொண்டு வரவும் முடியும் என்றால் அது அவரது உண்மையான தொண்டர்களால் மட்டும்தான் முடியும். அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் சிதற மாட்டார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் நிற்பவர்கள் அனைவரும் துப்பாக்கிபோல் ஒரே அணியாக இருப்பார்கள்.வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்தி அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். மக்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டார்கள். மே 5ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பதவியேற்கப்போகிறார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும் என்பதே மக்கள் தீர்ப்பு.
அதிமுக அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி பொறுப்பேற்ற உடன் முதலில் கையெழுத்திடப்படும் திட்டமே, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் 2,000 ரூபாய் செலுத்தும் திட்டம்தான். கருப்பு அட்டை, சிவப்பு அட்டை, சீனி அட்டை என எந்த பாகுபாடும் இல்லை. ரேஷன் அட்டை இருந்தால் அனைவருக்கும் இந்த தொகை கிடைக்கும். திமுக அறிவித்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் முறையாக வழங்கப்படவில்லை. அந்தத் திட்டம் முழுக்க முழுக்க ஏமாற்று வேலை. மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த கட்சி திமுக. அறிவித்த பல திட்டங்களையும் செயல்படுத்தாமல் பட்டை நாமம் போட்டது போல் வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறது. அதிமுக டெல்லியில் வைத்துள்ள கூட்டணியின் காரணமாக, அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்த முடியும்.
மத்திய அரசிடம் சண்டை போடாமல், பேசிக் கேட்டுப் பெறத் தெரிந்த ஆட்சி தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும். டெல்லியில் மோடி ஆட்சி, தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி – இதுதான் தமிழகத்திற்கு நல்ல தருணம். திமுக அரசு மகளிருக்கு மட்டும் இலவச பேருந்து பயணத்தை அறிவித்து, ஒன்றாக இருந்த குடும்பங்களைப் பிரித்துவிட்டது. கணவன் தனியாக, மனைவி தனியாகப் பயணிக்க வேண்டிய நிலையை உருவாக்கியது. அந்தப் பிரிந்த குடும்பங்களை மீண்டும் ஒன்றாகச் சேர்க்கும் வகையில், ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணத் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இனிமேல் ஆண்கள் தங்கள் மனைவியோடும், காதலியோடும் அரசு பேருந்தில் இலவசமாக பயணித்து சினிமாவுக்கு செல்லலாம், ஊர் சுற்றலாம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/20/cm-mks-sad-2026-01-20-18-00-25.jpg)
அதிமுக தேர்தல் அறிக்கையைப் பார்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையைப் பிய்த்துக்கொண்டு இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி அறிவிக்கும் ஒவ்வொரு திட்டமும் அவரது சொந்த சிந்தனையில் உதித்தவை. யாரோ எழுதிக் கொடுத்தது இல்லை. ஏழைகளை பாதுகாக்கும் வகையிலான திட்டங்களை திட்டமிட்டு உருவாக்கியவர் எடப்பாடி பழனிச்சாமி. உண்மையான திராவிடம் என்றால் அது அதிமுகதான். சமூக நீதியை காக்கும் காவலர் எடப்பாடி பழனிச்சாமி. சமூக நீதி, தமிழ் புலமை என்று பேசும் திமுக ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கவில்லை. திமுக ஆட்சியில் குடிநீரில் கூட கலப்படம் நடக்கிறது. சிவகாசி மாநகராட்சியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குடிநீருடன் கண்மாய் நீரை கலப்பதால் பொதுமக்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.
திருத்தங்கல் மேம்பாலம் விவகாரத்தில், ஏற்கனவே பிரதமர் அடிக்கல் நாட்டிய நிலையில் மீண்டும் அமைச்சர் அடிக்கல் நாட்டுவது வேடிக்கையாக இருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் வழங்க முடியும் என்றால் அது எடப்பாடி பழனிச்சாமியால் மட்டுமே முடியும். வரும் தேர்தலில் 190 முதல் 210 இடங்கள் வரை அதிமுக வெற்றி பெறும் என பிரபல பத்திரிகை நடத்திய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். திமுக ஆட்சியில் ஏழை மக்களுக்காக என்ன திட்டங்கள் செய்தார்கள் என்று பட்டியலிட முடியுமா?. ஏழை மக்கள் ஏழையாகவே இருக்க வேண்டும், படிக்காதவர்கள் படிக்காமலே இருக்க வேண்டும் என்று நினைக்கும் கட்சி திமுக.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/20/anna-arivalayam-2026-01-20-18-00-52.jpg)
இந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட திமுக வெற்றி பெறக் கூடாது என்ற நிலையை அதிமுக தொண்டர்கள் உருவாக்க வேண்டும். இந்தத் தேர்தலோடு திமுக அரசியலை முடிக்க வேண்டும். அதிமுக கூட்டணிக்கு பலரும் வந்து கொண்டிருக்கிறார்கள். 23ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தரும் போது அவர் பங்கேற்கும் மேடையில் எத்தனை கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைகின்றன என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள். கூட்டணி குறித்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் முடிந்துவிட்டன. எல்லோரும் அதிமுக கூட்டணிக்குள் வந்து சேர்வார்கள். அதிமுகவின் ஒரு வாக்கு கூட பிரியாது. எம்ஜிஆர், ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் துப்பாக்கிபோல் ஒரே அணியில் நிற்போம். திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றி, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் நாற்காலியில் அமர வைக்கும் வரை அதிமுக ஓயாது.” என்றார்.
Follow Us