Rajendra Balaji said DMK is afraid of SIR
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாமில் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் மட்டுமே பெறப்பட வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ராவிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் முடிவுகள் அனைத்தும் திடமான தைரியமான நேர்மையான முடிவுகள். அதிமுக தொண்டர்களின் கருத்துகளை உள்வாங்கியே அவர் முடிவு எடுக்கிறார். மற்றவர்கள் சொல்வதற்காக எந்த முடிவும் எடுக்கமாட்டார். கட்சியின் தலைமைக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை எப்படி கட்சி தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள்? எடப்பாடி பழனிச்சாமிதான் அதிமுகவின் முகம், அவரது கருத்துகளை உள்வாங்குபவர்கள்தான் உண்மையான அதிமுக விசுவாசி.
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக மாற்று கருத்துகளை கூறுவது, தலைமையை விமர்சிப்பது, அதிமுக தலைமைக்கு தேதி குறிப்பது, கெடு விதிப்பது யாராக இருந்தாலும் அதிமுக தலைமை பார்த்துக் கொண்டிருக்காது. எடப்பாடி பழனிச்சாமி எடுக்கின்ற எல்லா நடவடிக்கைகளும் சரிதான், சப்பைக்கட்டு கட்டும் பணியை யார் செய்தாலும் அது தவறு. அதிமுக களத்தில் இருக்கிறதா, இல்லையா என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். எந்த ஒரு பிரச்சனை என்றாலும் களத்தில் நின்று போராடுவது அதிமுகதான் என்பதை உலகமே அறியும். எனவே, மற்றவர்களின் கருத்திற்கு இங்கே இடமில்லை. இதற்கான பாடமும் பதிலடியும் தேர்தல் முடிவு கொடுக்கும்.
ஜனவரிக்கு பின்னால் அதிமுகவை நோக்கி பல கட்சிகளும் பல அமைப்புகளும் ஓடி வந்து ஆதரவு கொடுக்கும். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து எடப்பாடி பழனிச்சாமி வெற்றி கூட்டணியை அமைப்பார். எஸ்.ஐ.ஆர் (SIR) என்பது காலகாலமாக நடைபெற்று வருகிறது. எஸ்.ஐ.ஆர் திட்டம் வரவேற்கத்தக்கது, எஸ்.ஐ.ஆர் இன்றைய காலகட்டத்துக்கு தேவையானது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் போலியான வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கண்டறியப்பட்டு களையப்பட வேண்டும், ஒருவரது வெற்றியை தோல்வியாக்குவதும், தோல்வியை வெற்றியாக்குவதும் போலி வாக்காளர்கள்தான். அவர்களை களையெடுப்பதற்கான நடவடிக்கைதான் எஸ்.ஐ.ஆர் சீர்திருத்த நடவடிக்கை. போலியான வாக்காளர்களை சேரக்கக்கூடாது, தகுதியான வாக்காளர்கள் நிராகரிக்கப்படக்கூடாது என்பதே எங்களது கொள்கை.
ஆங்காங்கே அதிகார துஷ்பிரயோகம் நடைபெற்றுவிடக் கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையமும் மாவட்ட நிர்வாகமும் நடுநிலையுடன் செயல்பட வலியுறுத்தி ஆட்சியாளர்களிடம் மனு அளித்து வருகிறோம். எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சரியாகச் சென்று கொண்டிருக்கிறது. சார் என்று சொன்னாலே திமுகவினருக்கு பயம். அதனால் நாம் எஸ்.ஐ. ஆர். என்று சொல்லிக்கொள்வோம். தமிழகத்தில் ரெட்டை வாக்குகள் இருக்க கூடாது. பொய் வாக்குகளையும், போலி வாக்காளர்களையும் வைத்து வெற்றி பெற்று வந்த திமுக, இந்த தேர்தலோடு தங்களது கதை முடியப் போகிறது என்பது தெரிந்தவுடன் பதறுகிறது. தங்களது தோல்விக்கான காரணத்தை இப்பொழுது முதலே திமுக தேடுகிறது” என்றார்.
Follow Us