“மத்தியில இருக்கிறது உங்க ஐயா இல்ல.. எங்க ஐயா மோடி இருக்காரு.. மோடி எங்க டாடி..” என மீண்டும் திருவாய் மலர்ந்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி.
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் அதிமுக நிலை முகவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியபோது, “நம்மை எதிர்க்க திமுகவில் ஆளே இல்லை என்ற நிலையை உருவாக்கவேண்டும். அதிமுக ஆட்சியில் கொண்டுவந்து செயல்படுத்திய திட்டங்களுக்குத்தான் திமுக திறப்பு விழா நடத்திக்கொண்டிருக்கிறது. திமுக பொய்ப் பிரச்சாரம் செய்து உண்மைகளை மறைக்கப் பார்க்கிறது. அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்கு விதை விதைத்த கரு நாங்கதான். வளர்த்ததும் நாங்கதான், பெயர் வைத்துக்கொண்டது நீங்க.
தற்போது புதிதாகக் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் போல், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரயில்வே மேம்பாலங்களுக்கு எல்லாம் அனுமதி பெற்றுத் தந்தது அதிமுக ஆட்சியில்தான். உங்களால் மத்திய அரசிடமிருந்து அனுமதி பெற முடியுமா? மத்திய அரசில் ஆட்சியில் இருப்பது உங்க ஐயா இல்லை, எங்க ஐயா. மோடி எங்க டாடி தான் இருக்காரு. மாணிக்கம் தாகூர் எம்பி-யால் ரயில்வே மேம்பாலத்திற்கு அனுமதி வாங்க முடியுமா? ஆட்டுக்கு தாடி எப்படி தேவை இல்லையோ, அதுபோல நாட்டுக்கு காங்கிரஸ் தேவையில்லை.
அதிமுக ஆளட்டும், திமுக வாழட்டும். என்றுமே பெரிய கட்சி அதிமுக- திமுக தான். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக செய்யும் தில்லுமுல்லு வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றுவோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எதுவுமே செய்யவில்லை. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிவகாசி வட்ட சுற்றுச்சாலை அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம். அதிமுகவின் கடைசித் தொண்டன் இருக்கும்வரை திமுகவின் ஏமாற்று நாடகம் எடுபடாது. திமுகவால் சுயமாக எதுவும் செய்ய முடியாது. டெல்லியில் திமுக சொல்வதைக் கேட்காது மத்திய அரசு. அதிமுக இல்லாமலா சிவகாசிக்கு ரயில்வே மேம்பாலம் வந்தது?
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக ஆட்சியில் நடந்த ஊழலை விசாரிப்போம். அதிமுக ஆட்சி தவறே செய்யாது என்று நான் கூறவில்லை. சிறு சிறு தவறுகள் நடந்திருக்கும். திமுக ஆட்சியோ தவறை மட்டுமே செய்கிறது. தற்போதுள்ள அமைச்சர்கள், எம். பி, எம்.எல்.ஏ.க்கள், யாருமே மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. அதிமுக தான் பல்வேறு செயல் திட்டங்களை விதைத்துள்ளது. தென் மாவட்டங்களை திமுக அரசு வஞ்சித்து வருகிறது. அதிமுக ஆட்சி தான் மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்தி தொழில்களை மேம்படுத்தியது. தமிழ்நாட்டுக்கு குடும்ப ஆட்சி வேண்டுமா? மக்கள் ஆட்சி வேண்டுமா? என்ற கேள்வியை மக்கள் முன் வைக்கவேண்டும். நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது நடக்க கைமாறு கருதாமல் களப் பணிகளைச் செய்யுங்கள்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/12/rajendra-2025-11-12-22-03-22.jpg)