ராஜபாளையத்தில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பேசினார்.
“திமுகவினர் தற்போது பல் இளித்துக்கொண்டு சென்று மக்களிடம் வாக்கு பெறமுடியாது. மக்கள் பல்லை உடைத்து விடுவார்கள். அந்த அளவுக்கு மக்கள் திமுக மீது வெறுப்பில் உள்ளனர். திமுகவினரின் அராஜகம், அட்டூழியம், தீமைகளை, தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட தலைகுனிவை அதிமுகவினர் அடித்துச் சொல்லவேண்டும். இல்லையென்றால் பெருந்தன்மையான குணம் கொண்ட மக்கள் மறந்துவிடுவார்கள். எதையும் விட்டுக்கொடுக்கும் எண்ணம் கொண்டவர்கள் தமிழ்நாட்டு மக்கள். நாம் தற்போது ஏமாந்துவிட்டால், மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு திமுகவின் அட்டூழியங்கள் தொடரும். இந்த நிலை மாறவேண்டும் என்றால், திமுக ஆட்சியில் ஏற்பட்ட சங்கடங்கள், கஷ்ட நஷ்டங்களை, துன்பங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, சமையல் எரிவாயு மானியம், மதுவிலக்கு அமல்படுத்துதல், மின் கட்டணம் மாதம் தோறும் கணக்கீடு செய்வது உள்ளிட்ட 10 முக்கிய அறிவிப்புகளில் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை. பத்தும் ஃபெயிலியர் ஆகிவிட்டது. திமுக ஆட்சி ஜீரோ. ஒரு மதிப்பெண்கூட பெறவில்லை. ஒன்றுமே செய்யாத திமுக, பிறர் மீது குற்றம் சொல்லி கட்சியை நடத்துகிறார்கள். ஆட்சியை மீண்டும் பிடிக்க முயற்சி செய்கிறார்கள். அதைத் தடுக்கின்ற பணியை கட்சி நிர்வாகிகள் செய்யவேண்டும்.” என்றார்.