“த.வெ.க. மாநாட்டுல துண்டை தூக்கி தோள்ல போட்டாரு; துண்டை தூக்கி கீழே போட்டாரு; விஜய் ஒரு விளையாட்டுப் பிள்ளை. சினிமாவுல என்ன விளையாட்டுத்தனம் பண்ணுனாரோ, அதையேதான் அரசியல்லயும் பண்ணுறாரு” என்று த.வெ.க. தலைவர் விஜய்யை விமர்சித்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடமும் அவ்வப்போது ‘விளையாட்டுத்தனம்’ எட்டிப் பார்த்துவிடுகிறது. ‘இல்லையா பின்னே..’ என்று கூறும் அளவிலேயே தொடர்ச்சியாக அவருடைய நடவடிக்கைகள் உள்ளன. 

Advertisment

ராஜேந்திரபாலாஜி அமைச்சராக இருந்தபோது அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவில் அலங்காரத்திற்காக ஒட்டப்பட்டிருந்த அத்தனை பலூன்களையும் கத்தரிக்கோலால் உடைத்து விளையாடிவிட்டே, ரிப்பனை கட் பண்ணினார். ‘என்ன இது?’ என்று கேட்டபோது “பலூனை உடைத்தால் டம்முன்னு காற்று வெளியேறி சத்தம் வரும். பார்ப்பதற்கும் கேட்பதற்கும் ஜாலியாக இருக்கும்.” என்று பதிலளித்தார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள அப்போது விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த சிவஞானத்துடன் சென்றபோது, மாணவர்களின் பயிற்சிக்காக வைத்திருந்த துப்பாக்கியைக் கையில் எடுத்து, ஒரு கண்ணை மூடிக்கொண்டு மறு கண்ணால் இலக்கை நோக்கிச் சுட்டார். குறி தப்பவில்லை என்பதால், ‘அண்ணன் அரசியல்ல ஒரு ஜேம்ஸ்பாண்ட்’ என்று கட்சியினர் அவரை குஷிப்படுத்தியதெல்லாம் நடந்தது. 

‘அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பழிவாங்குவதற்காகப் புனையப்பட்ட பொய் வழக்கு’ என்று தொடர்ந்து திமுக ஆட்சியை விமர்சித்துவரும் ராஜேந்திரபாலாஜி, அந்த மோசடி வழக்கில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த குற்றப்பத்திரிக்கை நகலைப் பெற்றுக்கொள்வதற்காக, தற்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜரானார். அங்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் மல்லி என்ற கிராமத்தில் புல்வெளி மைதானத்தை திறந்துவைத்தவர், கால்பந்து விளையாடி ‘கோல்’ போட்டார்; கிரிக்கெட் மட்டையை லாவகமாகப் பிடித்து பந்தினை தொடர்ந்து அடித்து கைதட்டல் வாங்கினார்.

“அரசியலும் ஒரு விளையாட்டு ஆகிப்போனதால், வாக்கு வங்கியோ, பணமோ, புகழோ, சூட்சுமமோ, வலு உள்ளவர்கள் தேர்தலிலும் அடித்து விளையாடி வெற்றிபெற்று விடுகிறார்கள்” என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.