விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தேர்தல் களப்பணியாற்றிய அதிமுக நிர்வாகிகளுக்கு அறுசுவை கறி விருந்து பரிமாறிவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, “பெருந்தலைவர் காமராஜரின் புகழை யாராலும் அழிக்க முடியாது. அவரது பெயரையும் புகழையும் மங்கச் செய்ய நினைப்பது திட்டமிட்ட சதி. யூடியூபர் முக்தார் செய்த செயல் அதிமுகவுக்கு மட்டுமல்ல, காமராஜரை நேசிக்கும் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் எதிரானது. முக்தாரை கண்டித்து வரும் 9ஆம் தேதி நாடார் மகாஜன சங்கம் நடத்தும் போராட்டத்திற்கு அதிமுக முழு தார்மீக ஆதரவு தரும். அந்த போராட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்வார்கள். முக்தாரை தமிழக அரசு கைது செய்தால்தான், காமராஜர் போன்ற சமூகப் புரட்சியாளர்களை அவதூறாக பேசி விளம்பரம் தேடும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். எந்த தவறும் செய்யாத சவுக்கு சங்கரையே தேடி தேடி கைது செய்த அரசு, பெருந்தலைவர் காமராஜரை அவதூறாக பேசி பிரச்சினை உருவாக்கிய முக்தாரை இன்னும் கைது செய்யாதது பல சந்தேகங்களை எழுப்புகிறது.
அவர் திமுக அனுதாபி என்பதால் திமுகவினர் பேச வைத்தார்களா என்ற கேள்வியும் இயல்பாக வருகிறது. காந்தியின் பெயருக்கும் புகழுக்கும் பெருமை சேர்க்கும் அரசாக பாஜக அரசு செயல்படுகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோளுக்கிணங்க 100 நாள் வேலைத்திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்பட்டது. அதிமுக ஆட்சி அமைந்தவுடன், இந்தத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்பட்டு வாரம் ஒருமுறை ஊதியம் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்ட அறிவிப்பு, அரசு ஊழியர்களை விருந்துக்கு அழைத்து வெந்நீர் ஊற்றியது போல உள்ளது. அந்தத் திட்டத்தில் பல குறைகள் உள்ளன. புதிய ஓய்வூதியத் திட்டம் முழுக்க முழுக்க ஏமாற்று வேலை. ஏழை எளிய மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் கொண்டாட 5000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி போராடினார். அந்தப் போராட்டத்தின் விளைவாக திமுக அரசு 3000 ரூபாய் அறிவித்தது. மக்கள் விரும்புவது 5000 ரூபாய், 3000 ரூபாய் போதுமானதல்ல. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், அடுத்த ஆண்டு தைப்பொங்கலுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன்
5000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
அதிமுகவிற்கு வரும் சட்டமன்றத் தேர்தல் கடைசி தேர்தல் என்று பேசுவது இயலாதவர்களின் வார்த்தை. காங்கிரஸ் கட்சி எந்த நிலையில் உள்ளது என்பதை அவர்களது எம்.பி.க்களே சொல்லிவிட்டார்கள். காங்கிரஸ் கட்சி முழுக்க கலகலத்து போய்விட்டது. திமுகவின் தோளில் ஏறினால்தான் காங்கிரஸால் அரசியல் சவாரி செய்ய முடியும். கிளைக் கழகம், வட்டக் கழகம், வார்டு கழகம் என்று அடித்தள அமைப்புகளுடன் இயங்கும் கட்சிகள் அதிமுகவும் திமுகவும் மட்டுமே. திமுக எங்களைப் பற்றி பேசலாம், நாங்கள் திமுகவைப் பற்றி பேசலாம். அந்த வலு இரு கட்சிகளுக்கும் உண்டு. காங்கிரஸுக்கு அந்த வலு இல்லை. அதிமுக யாருக்கும் அடிமை கிடையாது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு எந்தெந்த கட்சிகள், அமைப்புகள் அதிமுகவிற்கு ஆதரவு தரப் போகின்றன என்பதை தமிழக மக்கள் நேரில் பார்ப்பார்கள். எடப்பாடி பழனிச்சாமி பலமான கூட்டணியை அமைப்பார். எங்கள் பக்கம் வரக்கூடிய வாய்ப்புள்ளவர்கள் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/05/raj-2026-01-05-10-07-37.jpg)
தவெக களத்திலேயே இல்லை. அவர்களெல்லாம் போக்கஸ் அரசியல் மட்டுமே. களத்தில் இருப்பது அதிமுகவும் திமுகவும்தான். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. யானையைப் பார்க்க வெள்ளெழுத்து கண்ணாடி தேவையில்லை. அதிமுக என்ற சினம் கொண்ட சிங்கமும், திமுக என்ற மதம் கொண்ட யானையும்தான் களத்தில் இருக்கிறது. அந்த யானையை எடப்பாடி பழனிசாமி என்ற சிங்கம் வீழ்த்துவார். சினிமா நட்சத்திரங்கள் யார் வந்தாலும் மக்கள் கூட்டம் கூடும். ஒரு கடையை திறந்து வைக்க வந்தால்கூட கூட்டம் கூடும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆனால் அந்தக் கூட்டம் வாக்காக மாறாது. வரும் சட்டமன்றத் தேர்தல் களம் தவெகவிற்கு பல பாடங்களை கற்றுத் தரும்.
தேர்தல் களத்தில் போராட வேண்டுமென்றால் பூத்தில் ஆட்கள் வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் முகவர்களை நியமித்து தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற்றுள்ள கட்சிகள் திமுகவும் அதிமுகவும் மட்டுமே. காங்கிரஸ், தவெக போன்ற கட்சிகளுக்கு 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த ஆட்களே இல்லை. பொங்கலுக்குள் அதிமுக முக்கிய தலைவர்கள் தவெகவில் இணைவார்கள் என்ற பேச்சுக்கு எந்த அடிப்படையும் இல்லை. அதிமுகவையும் எடப்பாடியாரையும் விட்டு ஒருவரும் செல்லமாட்டார்கள். 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியை விட்டு சென்றவர்கள் தவெகவில் சேர்ந்தால், அவர்களை அதிமுக என கணக்கிட முடியாது.
இது எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலும் நடந்தது, இப்போதும் நடக்கிறது. அவர்கள் காலாவதியானவர்கள். அவர்கள் சென்றால் அதிமுகவிற்கு எந்த பின்னடையும் இல்லை. அதிமுக எந்த சலசலப்புக்கும் அஞ்சாது. உழைக்கும் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமியின் கைபிடித்து வருகிறோம். அரசியலை விட்டு ஒதுங்கியவர்கள் மாற்றுக் கட்சிக்கு சென்றால் அதை அதிமுக இழப்பு என கணக்கிட்டால் அது ஏமாற்று வேலை. இஸ்லாமிய சமுதாய மக்களின் ஓட்டு அதிமுகவிற்கு முழுமையாக கிடைக்கும். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. கூட்டணி துண்டு மாதிரி, கொள்கை வேஷ்டி மாதிரி. துண்டை இழக்கலாம், ஆனால் வேஷ்டியை ஒருபோதும் இழக்க மாட்டோம்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/05/vijayrajen-2026-01-05-08-11-40.jpg)